இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 24, 2015

ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்களின் அவஸ்த்தை

தமிழகத்தில் ஓராசிரியர் பள்ளிகள் ஏறக்குறைய 2000 உள்ளன. அதேபோல, இரு ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள் 9000 உள்ளன. அதில் ஒரு ஆசிரியர் அலுவலக வேலையாக வெளியில் சென்றால், மற்றொரு ஆசிரியர் தான் 1 முதல் 5ம் வகுப்பு வரை பார்த்துக் கொள்ள வேண்டும். ஐந்து வகுப்புகளுக்கும் அவர்தான் பாடம் நடத்த வேண்டும். இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் பலர் விருப்பத்துடனும் சமூகநோக்குடனே பணியாற்ற வருகின்றனர்.

ஆனால், அவர்களின் திறமையை மாணவர்களுக்கு பயன்படுத்தாமல், அவர்களை அலுவலக பணி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக பணிகளுக்கும் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. இதனால் ஓராசிரியர் மற்றும் இரு ஆசிரியர் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி கற்பிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

வாக்காளர் பட்டியல் ஆய்வுப்பணி.இன்று முதல் துவக்கம்

இன்று முதல் ஏப்., 6 வரை வீடு வீடாக வாக்காளர் பட்டியலை, ஆதார் எண் வைத்து சரிபார்க்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள், பணியாளர்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இப்பணிகளில் ஈடுபடும் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஆதார் அடையாள அட்டையில் உள்ள எண்களை வாக்காளர் தெரிவிக்க வேண்டும்.

ஆதார் அட்டைக்காக காத்திருப்போர் அதற்கான ஒப்புகை சீட்டிலுள்ள ஆதார் பதிவு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும், திண்டுக்கல் தேர்தல் உதவி பதிவு அதிகாரி ராஜன் கூறியதாவது: திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் இந்த பணிகள் நடக்க இருக்கின்றன. இன்று துவங்கும். வாக்குச்சாவடி அலுவலர்கள் அந்தந்த பகுதிகளிலுள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை ஆதார் அடையாள எண்ணைக் கொண்டு உறுதிப்படுத்துவர், என்றார்.

போட்டித் தேர்வு அறிவிப்பு ஓவிய ஆசிரியர்கள் குழப்பம்

தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்வி தகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், விளையாட்டு, இசை ஆகியவற்றில் பகுதி நேர ஆசிரியர்கள் 6,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் ஓவிய ஆசிரியர்களாக உள்ளனர். இவர்கள் முழுநேர ஆசிரியராக நியமனம் பெற, கடந்த ஜனவரியில் போட்டி தேர்வு அறிவிப்பை டி.ஆர்.பி., வெளியிட்டது. இத்தேர்வு ஜூன் 6ல் நடக்க உள்ளது. அறிவிப்பில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்தவிதமான கல்வித்தகுதி தேவை என அறிவிக்கவில்லை. ஓவிய ஆசிரியர் நல்லகாசிராஜன் கூறியதாவது: இத்தேர்வு ஓவிய அறிவும், ஓவிய கல்வித்திறனையும் அடிப்படையாக கொண்டிருப்பதால், எந்தவித நிபந்தனையும் இன்றி, அனைவரையும் பங்கேற்க வாய்ப்பு தர வேண்டும். வரைதல், வண்ணம் தீட்டுதல் குறித்தும் எந்தவிபரமும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து டி.ஆர்.பி.,க்கும் தெரியப்படுத்தியுள்ளோம், என்றார்.

Monday, March 23, 2015

பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் அரசு


.*கோரிக்கைகளுக்காக கையேந்த வைப்பதா?
*பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவமதிப்பதா?
*எத்தனை முறை கேட்டும் பாராமுகம் காட்டுவதா?

ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அஸ்திவாரம் முக்கியம். ஒரு சமுதாயம் அறிவுசார்ந்த, இளமையான, சுறுசுறுப்பான சமுதாயமாக  இருப்பது மாணவர்கள் கையில்தான் இருக்கிறது. அந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் இருக்க வேண்டும். எதிர்கால  சமுதாயத்தை உருவாக்கும் இந்த ஆசிரியர்களை பணத்துக்காக, பணியிட மாற்றத்துக்காக அரசிடம் கையேந்த வைக்கக் கூடாது. அப்படி ஒரு நிலைமைதான்  தமிழகத்தில் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு பதில் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் வைக்கும் ஒவ்வொரு  கோரிக்கையும் வலுவான, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கும் நோக்கிலேயே இருக்குமே தவிர.. அதை சிதைப்பதாக இருக்காது.

அதனால்தான் அந்த காலத்திலேயே குருவுக்கு பிறகுதான், தெய்வத்தை வைத்தார்கள். ஆனால், ஆசிரியர்களின் நிலைமை என்ன? அடிப்படை உரிமைக்காக  போராட்டம் நடத்துகின்றனர். அப்படியும் அரசு கண்டுகொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப்  பள்ளி ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 28 சங்கங்கள் ஒன்றிணைந்து ஜாக்டோ அமைப்பை உருவாக்கி,  போராட்டத்தை நடத்துகின்றன. அவர்களை அரசு அழைத்து பேசவில்லை.  இதனால், ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வீணாகப் போன அரசு அழைப்பு: ஜாக்டோ குழுவினர் தங்கள் கோரிக்கை குறித்து பேசுவதற்காக முதல்வரின் தனிப் பிரிவில் மனு கொடுத்தனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பன்னீர் செல்வம் விருப்பம் தெரிவித்திருந்தார். ஜாக்டோ பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள  தலைமை செயலகத்துக்கு வந்தனர். அவர்களில் 15 பேர் மட்டும் முதல்வரை சந்திக்க தலைமைச் செயலக போலீசார் அழைத்து சென்றனர். சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக ஆசிரியர்கள் முதல்வர் அறையின் முன்பு காத்திருந்தனர். அவர்களை உட்கார வைக்காமலே காத்திருக்கவும் வைத்தனர்  அதிகாரிகள். பல மணி நேர காத்திருப்புக்கு பிறகு ஆசிரியர்களை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திக்க மறுத்துள்ளார். அதுவே போராட்டத்தின் வேகத்தையும்  கூட்டியுள்ளது.

Sunday, March 22, 2015

கபீர் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பம் வரவேற்பு

கபீர் புரஸ்கார்' விருதுக்கான விண்ணப்பங்களை பெறுவது குறித்து, தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பிறர் உயிரை காப்பாற்றியவர்கள், வீரதீர செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில், 'கபீர் புரஸ்கார்' விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டு இந்த விருதுக்கான, விண்ணப்பங்கள் பெறுவது குறித்து, தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:'கபீர் புரஸ்கார்2015 விருதுக்கு தகுதியான விண்ணப்பங்களை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பரிந்துரையுடன், அரசுக்கு அனுப்ப வேண்டும். பரிந்துரைக்க விண்ணப்பங்கள் இல்லாவிடில், 'இன்மை' அறிக்கை தயார் செய்து, உடனடியாக தொடக்கக்கல்வி இயக்ககத்திற்கு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், அனுப்ப வேண்டும். தகுதி வாய்ந்தவர்களின் திறமை மற்றும் தகுதிகளை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, March 21, 2015

TNPSC-Departmental Examinations Dec 2014 List of Tests Published TNPSC-Departmental Examinations Dec 2014 List of Tests Published >4 Edu.Dept-Deputy Inspectors Test- Paper-I >119 Edu.Dept-Dy.Inspector Test-Educational-Statistics

Click below

http://www.tnpsc.gov.in/Resultget-dec2k14.html

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28ல் நியமன கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு இணையதளம் மூலமாக வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான கலந்தாய்வு வருடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும்.

முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, இத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று, அசல் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றே மாதங்களில் பணி நியமனம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. 1.90 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வுப் பட்டியல் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வருகிற 28-ஆம் தேதி பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தேர்வு நடைபெற்ற பிறகு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனத்துக்கும் குறைந்தது 6 மாதங்கள் ஆகும். ஆனால், 1,789 ஆசிரியர்கள் 3 மாதங்களில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

தமிழக புதிய தேர்தல் கமிஷ்னர் திரு சீதாராமன்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் கமிஷனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சீதாராமன் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு மாநிலத் தேர்தல் கமிஷனராக, 2011ல் ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சோ.அய்யர் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம், 2013ல் முடிந்தது. அவருக்கு, இரண்டு ஆண்டுகள் பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இம்மாதம், 9ம் தேதியுடன், அவரது பதவிக் காலம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, புதிய மாநிலத் தேர்தல் கமிஷனராக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இப்பதவியில் இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பார் என, தலைமைச் செயலர் ஞானதேசிகன் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதாராமன், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1998ல், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்றவர்.

Thursday, March 19, 2015

கோடை விடுமுறையில் ப்ளஸ் 2 வகுப்புகள்

பிளஸ் 1 வகுப்பில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறையில், பிளஸ் 2 பாடங்களைத் துவங்க, அரசு பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்த பின், ஜூன் முதல் பாடங்களை துவங்குகிறோம். ஆனால், தனியார் பள்ளிகள், ஜனவரி முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களை நடத்துகின்றன. எனவே, இந்த முறை மே முதல் வாரத்தில் இருந்து, பிளஸ் 1 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களை துவங்க திட்டமிட்டு உள்ளோம். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர், கோடை விடுமுறையில் பாடம் எடுக்க, தாங்களே முன்வந்துள்ளனர். இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர், அதிக கட்டணம் செலுத்தி கோடையில், தனியார் 'டியூஷன்' செல்ல வேண்டிய தேவை இல்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.-

விரிசல் பள்ளிகளில் பாடம் நடத்த தடை

மேற்கூரை விரிசல் உள்ள பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.பராமரிப்பு இல்லாததால் ஏராளமான ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் சேதமடைந்துள்ளன. புதிய வகுப்பறை கட்டடங்களில் கூட மேற்கூரையில் விரிசல் உள்ளது. இதனால் மேற்கூரை விரிசல் உள்ள பள்ளிகளில் பாடம் நடத்தக்கூடாது. வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை இடித்துவிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏப்ரலுக்குள் கட்டங்களை சீரமைத்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். இதனால் முழு ஆண்டு தேர்வு முடிவதற்குள் பழுதடைந்த கட்டடங்கள் எஸ்.எஸ்.ஏ., பராமரிப்பு நிதி மூலம் சீரமைக்கப்பட உள்ளன. இதற்கான ஆலோசனை களை வழங்கி உள்ளோம், என்றனர்.

உலக நீர் நாள் மற்றும்.உலக வன நாள் கலை இலக்கிய போட்டிகள்

Click below

https://app.box.com/s/nx1kn030ljivpjqsrtgil8t79np4e7za

Wednesday, March 18, 2015

ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) பிளஸ் 2 புத்தகங்களை ஏப்ரல் முதல் வாரத்திலேயே விநியோகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில், அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களை விநியோகிக்க அரசு முடிவு எடுத்தது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் இப்போது மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து இந்தப் புத்தகங்களை அரசுப் பள்ளிகளுக்கு புதன்கிழமை (மார்ச் 18) முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

பிளஸ் 2 வகுப்புக்கான புத்தகங்கள் 95 சதவீதமும், பத்தாம் வகுப்புக்கான புத்தகங்கள் 50 சதவீதமும் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் மாத இறுதியில் நிறைவடைகின்றன. தேர்வு முடிந்த இரு தினங்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டு, மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்படும். அதேபோல், 9-ஆம் வகுப்புத் தேர்வுகள் நிறைவடைந்த பிறகு, பத்தாம் வகுப்புப் புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டுக்காக மொத்தம் 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.

இதில் 3.17 கோடி புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் ஆகும். 1.35 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கானது. இந்தப் புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும்.

பயிற்சி நாட்களில் விடுப்பு,அரசாணை வெளியீடு

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் பயிற்சி நாட்களுக்கு, விடுமுறை அளிப்பது தொடர்பான குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின், 'அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில், ஆண்டுக்கு, 10 நாட்கள் பயிற்சி தரப்படுகிறது. இதையும் சேர்த்து, 220 நாட்கள் பணி நாட்களாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பயிற்சி நாட்களுக்கு, ஈடுசெய்ய விடுப்பு தருவதில்லை என்று, ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால், பயிற்சிக்கு வர பல ஆசிரியர்கள் தயங்கினர்.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இது தொடர்பாக, நேற்று வெளியிட்ட அரசாணையில்,'220 பணி நாட்களில், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, முடிந்த அளவுக்கு பணி நாட்களில் ஆசிரியர் பணிக்கு குந்தகம் இல்லாமல், பயிற்சி நடத்த வேண்டும். விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டால், அதற்கு, 10 நாட்களில், ஈட்டு விடுப்பு எடுக்க அனுமதிக்கலாம்' என கூறப்பட்டுள்ளது.

Sunday, March 15, 2015

4 ஆண்டுகள் ஆகியும்.ஸ்மார்ட் கார்டு வழங்கவில்லை

4 ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வராத ஸ்மார்ட் கார்டு திட்டம்: ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளி கல்வித்துறையால், மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட, ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வரவில்லை.

இத்திட்டத்திற்காக, பல்வேறு புள்ளி விபரங்களை சேகரித்த கல்வித்துறை, எவ்வித தகவல்களையும் தரவில்லை என, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடந்த, 2010-11ம் கல்வியாண்டு முதல், பள்ளிக் கல்வித்துறை சார்பில், பிரத்யேக இணையதளம் அமைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கவும், திட்டம் வகுக்கப்பட்டது.

பள்ளிகளிலிருந்து, மாணவர்களின் புகைப்படம், பிறந்த தேதி, முகவரி, தந்தை பெயர், ரத்த பிரிவு, படிக்கும் வகுப்பு, பள்ளி, சமூக நிலை, உயரம், எடை, ஆதார் பதிவு எண் உட்பட தினந்தோறும், பல்வேறு புள்ளி விபரங்களை சேகரித்தது. ஸ்மார்ட் கார்டில், 16 இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம் உட்பட மாணவர்களின் அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த ஸ்மார்ட் கார்டு, 2011-12ம் கல்வியாண்டில், மாநிலம் முழுவதுமுள்ள, அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் 1.34 கோடி மாணவர்களுக்கும் வினியோகிக்கப்படும் என அறிவித்தது.

வங்கி ஏ.டி.எம்., அட்டையைப் போன்று இருக்கும் இந்த கார்டில், தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளலாம்; மாணவர்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும்.

மாணவர்கள் ஒரு பள்ளியில் சேர்ந்து இடையில் படிப்பை நிறுத்திவிட்டு, பின், வேறு பள்ளியில் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் இரட்டைப்பதிவு, இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் தவிர்க்கப்படும். தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாக மற்ற பள்ளிகளில் சேருவதற்கும் இது உதவிகரமாக இருக்கும்.

இ.எம்.ஐ.எஸ்., இணையதளம் வாயிலாக, இதற்கான பணிகள், 90 சதவீதம் முடிவடைந்ததாக அறிவித்த நிலையிலும், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வினியோகிக்காமல் இருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுறது. அறிவித்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றும், எவ்வித முன்னேற்றமும் இன்றி உள்ளது.

ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு, புள்ளி விபரங்களை அனுப்பியே, நாங்கள் சோர்வடைந்து விட்டோம். இத்திட்டத்தை செயல்படுத்தினால், பல்வேறு பணிச் சுமைகள் குறைக்கப்படும். திட்டங்களை அறிவிப்பது, செயல்படுத்தவா அல்லது ஆசிரியர்களை வாட்டுவதற்காகவா என்பது புரியவில்லை" என்றார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு முன் கூட்டியே புத்தக விநியோகம்

கோடை விடுமுறையில் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) புத்தகங்களை முன்கூட்டியே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, பிளஸ் 2 புத்தகங்கள் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ வழங்கப்படும் எனத் தெரிகிறது. தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி அல்லது பிப்ரவரியிலிருந்தே பிளஸ் 2 பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது. ஆனால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில்தான் புத்தகங்களே வழங்கப்படுகின்றன. எனவே, பிளஸ் 1, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது கோடை விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்தும் வகையில், வரும் கல்வியாண்டுக்கான பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு புத்தகங்களை முன்கூட்டியே வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

85 சதவீத புத்தகங்கள் தயார்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான 85 சதவீத புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் இப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள் முழுமையாக மாவட்டங்களைச் சென்றடைந்த பிறகு, அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். தேர்வுகள் முடிவடைந்ததும், மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதியிலோ, மே முதல் வாரத்திலோ இவை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

அடுத்ததாக, 10-ஆம் வகுப்புப் புத்தகங்களும் நிகழாண்டு முன்கூட்டியே வழங்கப்பட உள்ளன. ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான புத்தகங்கள் மே மாதத்திலேயே அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. 4.50 கோடி புத்தகங்கள்: ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை முதல் பருவ புத்தகங்கள், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்காக என மொத்தம் 4.50 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இதில் 3 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் ஆகும்.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனைக்காக 1.35 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் நேரடியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் வட்டார விற்பனை கிடங்குகளுக்கும் அனுப்பப்பட உள்ளன. தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் நிறுவனம் சார்பில் புத்தகங்களை அச்சிடுவதற்காக மொத்தம் 96 நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

Saturday, March 14, 2015

2010-2011 ல் நியமனம் பெற்ற தமிழாசிரியர்களுக்கு பணி வரன் முறை தேவையில்லை.கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2010-2011 ஆம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்ட தமிழாசிரியர்களுக்கு பணிவரன்முறை தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2010-2011 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு அலுவலக செயல்முறைகள் (எண்.102882, சி5, இ2, 2010) மூலம் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த நியமனங்கள் அனைத்தும் அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனங்களாக முறைப்படுத்தி ஆணை வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்யப்பட வேண்டிய அவசியமில்லை.

இந்த ஆசிரியர்கள் சார்பில் தகுதிகாண் பருவம் முடிந்தமைக்கான உத்தரவு வழங்கும் முன் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதற்கான சான்றினை முன்னிலைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணிபுரியும், பள்ளியின் தலைமையாசிரியர் மேற்கொள்ள, முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்த வேண்டும். இச்செயல்முறைகளின் நகல்களை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர்கள் மூலம் அனுப்பி வைக்கவும், பணிப் பதிவேடுகளில் உரிய பதிவுகளை மேற்கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஸ் பயிற்சி

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்க, ஒன்று, இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' வகுப்பு வரும் 16ம் தேதி நடத்தப்படுகிறது.

ஆங்கில மோகத்தின் காரணத்தால், பெரும்பாலான பெற்றோர் ஆங்கில வழிக் கல்வி தரும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்கின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவை சந்திக்கிறது. இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு ஆங்கிலம் எழுதவும், பேசவும் கற்றுக் கொடுக்க கல்வித்துறை முயற்சித்து வருகிறது. இந்த வரிசையில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்க (சர்வ சிக்ச அபியான்) திட்டத்தில், ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன்படி, அரசுப் பள்ளிகளின் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, வரும் 16, 17ம் தேதிகளில் முதற்கட்டமாகவும், 19, 20ம் தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் ஆங்கிலப் பேச்சு (ஸ்போக்கன் இங்கிலிஷ்) பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில், அனைத்து ஆரம்பப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆசிரியர்களுக்குப் பேச்சுப் பயிற்சி, மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சியுடன், ஆங்கிலப் பேச்சுக்கான 'சிடி'யும் வழங்கப்பட உள்ளது.

பேப்பர் சேஷிங் நடக்காது தேர்வுத்துறை அதிரடி

இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன. விடைத்தாள் களை, 'சேஸ்' செய்வதைத் தடுக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, நாளை துவங்குகிறது.

முதற்கட்டமாக தமிழ், ஆங்கில மொழிப்பாடங்கள்; வரும், 21ம் தேதி முதல், முக்கியப் பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பல புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. மாவட்டந்தோறும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், எந்த மாவட்ட விடைத்தாள்கள் எந்த மாவட்டத்துக்கு செல்கிறது என்பதை, ஆசிரியர்களே அறிய முடியும். இது, முறைகேடுகளுக்கு வழி வகுத்தது. மேலும், மாவட்ட தலைநகரில், ஒரு விடைத்தாள் திருத்தும் மையம் மட்டுமே அமைக்கப்படும்.ஆனால் இந்த ஆண்டு, மாவட்ட தலைநகரம் உட்பட, இரண்டு அல்லது மூன்று மையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த மையங்களுக்கு, பிற மாவட்டங்களில் இருந்து விடைத்தாள்கள் அனுப்பப்படுகின்றன. இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:ஆண்டுதோறும், அனைத்து மாவட்ட விடைத்தாள்களும் பண்டல் பண்டலாக வைக்கப்பட்டு மொத்தமாக கலக்கப்படும். இதன்பின், விடைத் தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள் கட்டுக்கள் மாவட்ட வாரியாக அனுப்பப்படும். இந்த ஆண்டு, அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் விடைத்தாள்கள் கலக்கப் பட்டு, பிற மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், எந்த விடைத்தாள் யாருக்கு செல்கிறது என்பதை கண்டு பிடிக்கவோ, 'சேஸ்' செய்யவோ முடியாது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில், வசதியுள்ள இடங்களில், கண்காணிப்பு கேமரா வைக்கப்படும். விடைத்தாளை திருத்தியதும், பக்க வாரியாக மதிப்பெண்ணை பட்டியலிட்டு, உடனடி யாக தேர்வுத்துறை இணைய தளத்தில், திருத்துனர்களே பதிந்து கொள்ள வேண்டும்.இப்பதிவுக்கும், விடைத் தாள் மதிப்பெண்ணுக் கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள்களில் கறுப்பு, நீல நிற பேனா எழுத்துக்கள், பென்சில் அடிக்கோடுகள் தவிர, வேறு ஏதாவது வித்தியா சமான குறியீடுகள் இருந் தால், அந்த விடைத்தாளை குறித்துக் கொள்ள வேண்டும்.

விடைத்தாளில், இரண்டு வித எழுத்துக்கள் இருந் தால், அதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மொத்தத்தில் முறைகேடுகள், தில்லுமுல்லுக்கு இடமின்றி, விடைத்தாள் திருத்தம் நியாயமாக மேற் கொள்ளும் வழிகாட்டுதல் கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.