இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 01, 2017

தினமணி-கட்டுரை

மழைப்பருவ விடுமுறைதான் தீர்வு!

By முனைவர் ச.சுப்புரெத்தினம் 
-தினமணி

வழக்கமாக, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு மிகுதியான பயனைத் தரும் தென்மேற்குப் பருவமழை, அக்டோபரில் முடிந்தவுடனேயே வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிடுவது வழக்கமாகும். தமிழகத்தில் கடந்த 27-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தற்பொழுது தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில், மழை தொடர்பான அசம்பாவித நிகழ்வுகளில் கடந்த 8 நாள்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழையினால் ஒரு பள்ளிக் கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததால், விடுமுறை அறிவிப்புக் காரணமாக அப்பள்ளிக்கு வராததால், அங்கு படிக்கும் 29 சிறார்கள் உயிர் தப்பினர் என்று அண்மையில் வந்த ஊடகச் செய்தியால், பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரை, கடலோர மாவட்டங்களில் அதிக மழையும், உள் மாவட்டங்களில் சற்றுக் குறைவான அளவில் மழையும் பெய்வது வழக்கமாகும். இவ்வாண்டும் அப்படித்தான் உள்ளது. தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரணநடவடிக்கைகளைச் செய்து வருகிறது.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால், விளை நிலங்களும், தாழ்வான பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளும் பல இடங்களில் மோசமாகத் தொடங்கியுள்ளன.

பெற்றோருக்கு, மழைக் காலங்களில் சிறார்களைக் காலையிலேயே பள்ளிக்கு அனுப்பத் தயார்படுத்துவதில் உள்ள சிரமத்தைவிட, இன்று பள்ளி இயங்குமா? அல்லது பள்ளிக்கு விடுமுறையா? என்று அறிந்து கொள்வதில் உள்ள சிரமம்தான் மிகுதியாக உள்ளது. இதே சிரமம், பள்ளியை நிர்வகிப்பவர்களுக்கும் உண்டு.
பள்ளியின் கல்வியாண்டு என்பது பொதுவாக, ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 30-ஆம் தேதி வரையிலான காலமாகும். இதில், விடுமுறை தொடங்குவதும் அல்லது விடுமுறை முடிவதும் தொடக்கக் கல்வி வகுப்புகள், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வி வகுப்புகள் என இவற்றைப் பொருத்துச் சில நாள்கள் வேறுபடுவதுண்டு.
ஓர் ஆண்டுக்கான, பள்ளிகளின் வேலை நாள்களும் 216 முதல் 230 நாள்கள் வரை இருக்கும். மீத நாள்கள், வார இறுதி சனி மற்றும் ஞாயிறு விடுமுறை, பண்டிகை, தேசிய விடுமுறைகள் மற்றும் தேர்வு விடுமுறைகளுள் அடங்கும்.

பள்ளிகளில் காலாண்டுத்தேர்வு டிசம்பரில் நடந்து, அதன் பிறகு 7 முதல் 10 நாள்கள் வரை விடுமுறை விடப்படுகிறது. அதன் பின்னர், அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாள்கள், டிசம்பர் மூன்றாவது வாரத்திற்குப் பின் ஏறத்தாழ இதே கால அளவு இருக்கும்.
தமிழகத்தைப் பொருத்தவரை வடகிழக்குப் பருவமழைக் காலம்தான், மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் காலமாகும். இக்காலங்களில் சிறார்கள் பள்ளிக்குச் சென்று வருவதில் நிரம்பச் சிரமங்கள் உள்ளன. மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில், பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பள்ளியை நடத்துவோர் என அனைத்துத் தரப்பினரும் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களோ, ஊடகங்களில் வெளியாகும் மழை பற்றிய செய்திகள், வானிலை ஆய்வு மைய அறிக்கைகள், ஆட்சியரின் வரம்புக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் வானிலை மற்றும் மழைச் சூழல் ஆகிய இவற்றைக் கருத்தில் கொண்டே, மாணவர்களின் சிரமத்தைக் குறைக்கும் நோக்கில், பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிக்க வேண்டியுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படியே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இக்காலத்தில் வானிலை ஆய்வு என்பது, முற்காலத்தைவிடத் துல்லியமாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், சில வேளை இடத்திற்கு இடம் அல்லது நேரத்திற்கு நேரம் வானிலையில் மாற்றத்தைக் காண முடிகிறது.
முதல் நாள் மாலை அல்லது இரவில் பொழியும் மழையைக் கருத்தில் கொண்டு, அடுத்த நாளைக்குப் பள்ளி விடுமுறை என்று அறிவிக்கும் பொழுது, சில வேளை கணிப்புத் தவறி, அன்றைய தினம் முழுவதும் மழை பொழியாமல் இருப்பதுண்டு.
அவ்வாறே 'விடுமுறை' என்று அறிவிக்கப்படாத மறுநாள் காலையில் கனமழை பெய்யத் தொடங்குவதுண்டு. இதனால், விடுமுறை விடப்படாத அன்றைய தினத்தையும், விடுமுறை விடாத நிர்வாகத்தையும் எண்ணி பெற்றோரும் மாணவர்களும் வசைபாட வேண்டியிருக்கிறது.

பள்ளிக்குப் புறப்படும் நேரங்களில் வெளியாகும், பள்ளி விடுமுறை பற்றிய அறிவிப்புகளால் பலருக்குப் பயன் ஏற்படுவதில்லை. குழந்தைகள் பள்ளிகளைச் சென்று சேர்ந்தபின் வெளியிடப்படும் அறிவிப்புகளும் அத்தகையனவே.
தனியார் வாகனங்களில் பள்ளி செல்லும் மாணவர்களும், தாமே பள்ளிகளுக்குக் கொண்டுவந்து விட்டுச் செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களின் பிள்ளைகளும் இத்தகைய சிரமங்களையே அடைகின்றனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் எனப் பலதரப்பட்ட பள்ளிகள் உள்ளன. இவற்றின், பள்ளி தொடங்கும் நேரமும் வேறுபடுகின்றன.
பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளின் சொந்த வாகனங்களில் பள்ளிக்கு வந்து சேர்ந்துவிட்ட நிலையில், வகுப்புகளை நடத்துவதா? வகுப்புகளை நடத்தினால் ஒரு வேளை, பெற்றோரின் கண்டனத்திற்கும், மாவட்ட நிர்வாகம் விதிக்க நேரும் அபராத நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்படுவோமா? என்ற அச்சமும் பள்ளியைநடத்துபவர்களை ஆட்டுவிக்கிறது.
மழைக் காலங்களில் அரசின் இலவசப் பேருந்து அட்டையைப் பயன்படுத்திப் பேருந்துகளில் பயணித்துப் பள்ளி வந்து சேரும் மாணவர்களின் இன்னல்கள் சொல்லி மாளாது.
மழையால் பேருந்து சேவை குறைப்பு, கையில் குடையுடன் அல்லது மழைக் கோட்டுடன் பேருந்தினுள் துன்புற்றுப் பயணித்தல், தரமான அரசு மிதிவண்டிகள் இருந்தாலும், தரமற்ற சாலைகளில் பயணிப்பது என்பன போன்றவை, மழைக் காலங்களில் பள்ளி மாணாக்கர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளாக உள்ளன.

இந்தச் சிரமங்களையெல்லாம் கவனத்திற் கொள்ளும் சில பள்ளி நிர்வாகங்கள், 'ஊடகங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டால், அதற்கொப்ப நீங்கள் நாளை பள்ளி வரவேண்டியதில்லை' என முதல் நாளே கூறி விடுகின்றன. ஆனால், வெவ்வேறு ஊடகங்களிலும், வெவ்வேறு மாதிரியாகச் சில வேளை வெளியிடப்படும் அறிவிப்புகளால், மாணவர்களும் பெற்றோரும் குழம்பிப் போய் விடுகின்றனர்.
இவை ஒருபுறமென்றால், இவ்வாறு மழைக் காலங்களில் அவ்வப்பொழுது விடப்படும் விடுமுறை நாள்களைப் பின்னாளில் பள்ளி வகுப்புகளை நடத்திச் சரிகட்ட வேண்டியுள்ளது இன்னொரு சவாலாக உள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலம் என்பது தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் முதல் வாரம் வரையே. இதில், தொடர்மழை அல்லது கன மழை என்பது 20 நாள்களுக்கு மட்டுமே. ஆதலால், இந்த 20 நாள்களைப் பள்ளிகளுக்கு மழைப்பருவத் தொடர் விடுமுறையாக அறிவித்து அமல்படுத்தினால், பெரும்பாலான இடர்ப்பாடுகளைத் தவிர்க்க முடியும்.
அக்டோபர் நான்காவது வாரம் தொடங்கி நவம்பர் இரண்டாவது வாரம் முடிய 21 நாள்களை மழைப்பருவ விடுமுறையாக மாற்றியமைக்கலாம். இந்நாள்களுக்கு முந்தய அல்லது பிந்தய சில நாள்களில் பெய்யும் மழையை விடுமுறை என்ற கோணத்தில் பார்க்க வேண்டியதில்லை. 21 நாள்களைச் சரிகட்டுவது எளிதானது.
இந்த 21 நாள்களுள் 3 சனி, 3 ஞாயிறு விடுமுறை நாள்கள் ஆக 6 நாள்கள், தீபாவளி விடுமுறை நாள் 1 என 7 நாள்கள் போக, எஞ்சியுள்ளவை 14 நாள்கள். இந்த 14 நாள்களை, காலாண்டுத் தேர்வு விடுமுறையாகச் செப்டம்பரில் விடப்படும் நாள்களுள் 6 நாள்களையும், பின்னர் விடப்படும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாள்களில் 6 நாள்களையும் குறைத்துக் கொள்வதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். மீதமுள்ள 2 நாள்களைச் சனிக்கிழமைகளில் சரிகட்டிக் கொள்ளலாம்.
தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில், இருபருவ விடுமுறை நடைமுறையில் உள்ளது. பள்ளிகளைப் பொருத்தவரை முப்பருவக் கல்விமுறை இருந்தாலும், மழைப்பருவ மற்றும் கோடைப் பருவ விடுமுறை என இருபருவ விடுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால், பள்ளி மாணவர்கள் தற்பொழுது எதிர்கொள்ளும் பல இடர்ப்பாடுகள் தீர்ந்துவிடும்.
இத்தகைய இருபருவ விடுமுறை அமல்படுத்தப்பட்டால், மழைக்காலங்களில் பள்ளிச் சிறார்களுக்குத் தொற்று நோய்கள் பரவும் அபாயத்தைக் குறைக்க முடியும்.
போக்குவரத்துப் பிரச்னைகள் குறையும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், புயல் பாதுகாப்பு மையங்களும், பல்நோக்கு மையங்களும் உள்ளன. இவற்றிற்கப்பாலும் அரசுப் பள்ளிகளும் தேவைப்படுகின்றன.

பள்ளிகள் விடுமுறையில் இருந்தால் மாவட்ட நிர்வாகம் இந்நோக்கத்திற்காக இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் சிரமம் இருக்காது.
மழைப்பருவத் தொடர் விடுமுறை அமல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் பயிலும் சுமார் ஒன்றரைக் கோடி பள்ளி மாணாக்கரின் மழைக்கால இன்னல்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படும்.

No comments:

Post a Comment