இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 04, 2017

டோட்டோ ஸ்கூலுக்குப் போனபோது...


டோட்டோ - சானை உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டாலும் பரவாயில்லை, டோட்டோவின் கதையைக் கேட்டால் நிச்சயம் உங்களுக்கு அவளைப் பிடிக்கும். ஏனென்றால், உங்களைப் போல என்னைப் போல நிறைய குறும்புகளைச் செய்த சேட்டைக்காரக் குழந்தை அவள்.

சுட்டிப்பெண் டோட்டோ - சான் ஒரு பள்ளியிலிருந்து விலக்கப்பட்டு சமீபத்தில்தான் புதிய பள்ளியில் சேர்ந்திருந்தாள், ஆனால் அந்த புதிய பள்ளியிலிருந்தும் அவளை வெளியேறச் சொல்லிவிட்டார்கள். இது அவள் அம்மாவுக்கு வருத்தம் தந்தது. முதல் வகுப்பிலேயே அவள் பல முறை வெளியேற்றப்பட்டுவிட்டாள். ஒரு வாரத்துக்கு முன் டோட்டோவின் கிளாஸ் டீச்சர், டோட்டோவின் அம்மாவை அழைத்திருந்தார். டோட்டோவின் அம்மாவிடம் டீச்சர் சொன்ன முதல் வாக்கியமே, "உங்கள் மகள் மொத்த கிளாஸையும் கெடுக்கிறாள். தயவுசெய்து அவளை வேறு பள்ளியில் சேர்த்துவிடுங்கள். இனிமேல் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று டீச்சர் பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னாள். டோட்டோவின் அம்மா இதைக் கேட்டு திடுக்கிட்டாள். மொத்த கிளாஸையே இடையூறு செய்யும் அளவுக்கு டோட்டோ அப்படி என்ன செய்தாள் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.

"தன் டெஸ்க்கை பல நூறு முறை அவள் திறந்து மூடுகிறாள். எதையாவது வைக்க வேண்டும், அல்லது எடுக்க வேண்டும் என்றால்தான் டெஸ்க் டிராவைத் திறக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். உங்கள் மகள் இதை நன்றாகப் பிடித்துக் கொண்டுவிட்டாள். அவளது நோட்டுப்புத்தகம், பென்சில் பாக்ஸ், பாடப்புத்தகம், அப்புறம் டெஸ்கில் வேறு என்ன இருக்கின்றனவோ, அவற்றை வெளியே எடுக்கிறாள். அல்லது எதையாவது உள்ளே வைக்கிறாள். ஒரு எழுத்தை எழுதி முடிப்பதற்குள் மேற்கண்ட பொருள்களை ஒவ்வொன்றாக உள்ளே வைத்துவிட்டு, அடுத்த எழுத்தை எழுவதற்கு மீண்டும் எல்லாவற்றையும் வெளியே எடுப்பாள். இவை எல்லாவற்றையும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் அவள் செய்வாள். இதெல்லாமே தலையைச் சுற்ற வைக்கும். ஆனால், இதற்காக அவளை நான் திட்ட முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு முறை டெஸ்க் மேற்பகுதியை அவள் திறப்பதற்கும் மூடுவதற்கும் காரணம் இருக்கும்." இதைச் சொன்னபோது அந்த டீச்சரின் கண் இமைகள் படபடவென இமைத்தன.

இதைக் கேட்டவுடன் டோட்டோவின் அம்மாவுக்கு, டோட்டோ ஏன் டெஸ்க் மேற்பகுதியை அடிக்கடி திறந்து மூடுகிறாள் என்பதற்கான காரணம் கொஞ்சம்கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. இந்த புதிய பள்ளியில் இருந்து டோட்டோ முதல் நாள் வீடு திரும்பியதும் எவ்வளவு குதூகலமாக இருந்தாள் தெரியுமா? "இந்த ஸ்கூல் ரொம்ப நல்லாயிருக்கு. வீட்டில் உள்ள உன் மேஜை டிராயரை நீ இழுப்பியே, அதில் வெறும் டிராயர் மட்டும்தான் இருக்கு. ஆனா... ஸ்கூலில் உள்ள டெஸ்க்கின் மேல் பகுதியை அப்படியே தூக்கிவிடலாம்... அந்த டெஸ்க் ஒரு பெட்டி மாதிரி இருக்கும். அதில் எல்லா பொருளையும் வைத்துக்கொள்ள முடியும். அது எவ்வளவு சூப்பரா இருக்கு தெரியுமா?" என்று டோட்டோ சொன்னது அவள் அம்மாவுக்கு ஞாபகம் வந்தது. புதிய டெஸ்கின் மேல் பகுதியை டோட்டோ சந்தோஷமாகத் திறந்து மூடிய காட்சி அம்மாவின் மனதுக்குள் ஓடியது. டெஸ்கின் மேற்பகுதியைத் திறந்து மூடுவது அப்படியொன்றும் பெரிய குறும்புத்தனமாக அம்மாவுக்குத் தோன்றவில்லை. அப்படிச் செய்து பார்ப்பதில் உள்ள புதுமை சலித்துப் போனவுடன், இப்படிச் செய்வதை டோட்டோ விட்டுவிடலாம் என்றே அம்மாவுக்குத் தோன்றியது.

அதே நேரம், "இது மட்டும் என்றால்கூட, நான் இவ்வளவு பெரிசு படுத்தியிருக்க மாட்டேன். டெஸ்கை மூடித் திறக்கும் நேரம் போக, கிளாஸ் நடக்கும் மற்ற எல்லா நேரமும் டோட்டோ நின்றுகொண்டே இருப்பாள்," என்றாள் அந்த டீச்சர். "எழுந்து நிற்கிறாளா, எங்கே?" என்று அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள். "ஜன்னலில்தான். அப்பொழுதுதானே தெருவில் இருக்கும் இசைக்கலைஞர்களைக் கூப்பிட முடியும்?" - அந்த டீச்சர் கிட்டத்தட்ட அலறினாள். அதன் பிறகு டீச்சர் சொன்ன கதை இதுதான்: கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு டெஸ்கின் மேல் பகுதியைத் திறந்து மூடிய பிறகு, டோட்டோ ஜன்னலருகே நின்று தெருவை வேடிக்கை பார்ப்பாள். சரி, டெஸ்கைத் திறந்து மூடி சத்தம் போடாதவரை நல்லது என்று நான் நினைக்கும்போது, வெளியே அலங்காரமாக ஆடை அணிந்து நடந்து செல்லும் தெரு இசைக்கலைஞர்களை டோட்டோ திடீரெனக் கத்திக் கூப்பிடுவாள். எங்களது கிளாஸ் தெருவுக்குப் பக்கத்தில் இருப்பதால், தெருவில் போகிறவர்களிடம் ஜன்னல் வழியே பேச முடியும். டோட்டோ கூப்பிட்டவுடன் இசைக்கலைஞர்கள் ஜன்னலுக்கு அருகே நின்றுவிடுவார்கள்.

"அதோ அவர்கள் வந்துவிட்டார்கள்," என்று டோட்டோ சப்தமாகக் கத்துவாள். உடனே, கிளாஸில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் ஜன்னலருகே குழுமிவிடுவார்கள். "எங்களுக்கு வாசித்துக் காட்டுங்கள்" என்று டோட்டோ சொன்னவுடன், ஒரு கச்சேரி நடக்கும். அது முடியும்வரை நான் கிளாஸ் எடுப்பதை நிறுத்திவிட்டு பேசாமல் நிற்பேன். அவர்கள் போன பின், எல்லாக் குழந்தைகளும் தங்கள் டெஸ்குக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால், டோட்டோ மட்டும் ஜன்னல் அருகேயே நின்றுகொண்டு, "இன்னொரு இசைக்குழு இந்த வழியே வரலாம். அவர்களை நாம் கவனிக்கத் தவறிவிட்டால், அவமானம் இல்லையா?" என்று டோட்டோ பதில் சொல்லுவாள். "இப்போது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இது கிளாஸுக்கு எவ்வளவு பெரிய தொந்தரவு" என்று டீச்சர் உணர்ச்சி பொங்கச் சொல்லிக்கொண்டிருந்தாள். "டோட்டோ வேறு என்ன செய்தாள்?" என்று அம்மா கேட்க, "வேறு என்ன செய்யவில்லை?" என்று டீச்சர் உரக்கக் கத்தினாள். இப்படியாக டோட்டோ, அந்தப் பள்ளியில் இருந்தும் வெளியேற்றப்பட்டாள். இது போன்ற சம்பவங்கள் காரணமாக டோட்டோவுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவளுடைய அம்மா நினைத்தாள். அது மட்டுமில்லாமல், தனது சின்னக் குழந்தையைப் புரிந்துகொள்ளும் பள்ளியை டோட்டோவின் அம்மா தேடிக் கண்டுபிடித்தார். அந்தப் பள்ளிதான் டோமாயி. அந்தப் பள்ளியை நடத்தியவர் கோபயாஷி.

டோமாயி பள்ளியில் காலி ரயில் பெட்டிகள்தான் கிளாஸ் ரூம். கிளாஸ்ரூமே இவ்வளவு சுவாரசியமாக இருக்கும் அந்த ஸ்கூலில் பாடங்களோ, பரீட்சைகளோ, அடியோ, திட்டோ கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் எந்த விஷயத்தைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறதோ, அதை அவர்களுக்கு உரிய வேகத்தில் கற்றுத் தரும் பள்ளிதான் டோமாயி. டோட்டோவின் உண்மைப் பெயர் டெட்சுகோ குரோயாநாகி. அவள் பெரியவள் ஆனவுடன் உலகப் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ணத் தூதராகவும் ஆனார். அதற்கு டோமாயி பள்ளியும், அதை நடத்திய கோபயாஷியும்தான் முக்கியக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயங்கள் அனைத்தையும் "டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி" என்ற பெயரில் அவர் புத்தகமாக எழுதியுள்ளார். அது வெளியான இரண்டு வருடத்தில் ஜப்பானிய மொழியில் 50 லட்சம் பிரதிகள் விற்றது. உலகப் புகழ்பெற்ற இந்தப் புத்தகம் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. டோட்டோ படித்த டோமாயி பள்ளியைப் போன்ற ஒரு ஸ்கூல் நமக்கும் இருந்தால், நிச்சயம் ஜாலியாக இருக்கும், இல்லையா?

No comments:

Post a Comment