இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 12, 2017

மே 1-ஆம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம்: 5 நகரங்களில் அமலாகிறது


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வரும் மே மாதம் 1-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இந்த புதிய நடைமுறை 5 நகரங்களில் முதல்கட்டமாக அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) தலைவர் பி. அசோக், தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது:

நாட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில், 95 சதவீத விற்பனை நிலையங்கள், அதாவது சுமார் 58 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மத்திய அரசுக்குச் சொந்தமான ஐஓசி, பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவைகளுக்குச் சொந்தமானவை ஆகும். தேர்வு செய்யப்பட்ட 5 முக்கிய நகரங்களில் மட்டும் வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல், நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறையை மேற்கண்ட நிறுவனங்கள் அமல்படுத்தவுள்ளன. இதையடுத்து, நாடு முழுமைக்கும் படிப்படியாக இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும்.

முதலில், புதுச்சேரி, ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ராஜஸ்தானின் உதய்ப்பூர், ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர், சண்டீகர் ஆகிய 5 நகரங்களில் நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது. நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயிப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமானதுதான். ஆனால், அதை முதலில் பரிசோதனை ரீதியில் செயல்படுத்த வேண்டியுள்ளது. பரிசோதனை முறையில், இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டதும், அப்போது அதன் தாக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

பிறகு, இந்த நடைமுறை நாடு முழுமைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் விரிவுபடுத்தும். பரிசோதனை முயற்சி, ஒரு மாதத்தில் தொடங்கி வைக்கப்படும் என்று பி.அசோக் கூறினார். ஆனால், பரிசோதனை முயற்சி எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது குறித்து பி.அசோக் தெரிவிக்கவில்லை. ஆனால், எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறியபோது, வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தன. இந்தியாவில் முன்பு பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசிடமே இருந்தது.

இந்நிலையில், பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனத்திடம் மத்திய அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு ஜுன் மாதம் அளித்தது. இதேபோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்படைத்தது. அதன்படி, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, இந்தியாவில் மாதந்தோறும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஆனால், விலையை மாற்றியமைப்பதற்கு முன்பு மத்திய அரசிடம் எண்ணெய் நிறுவனங்கள் கலந்தாலோசனை நடத்த வேண்டும்.

இந்நிலையில், நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தால், சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலவரப்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையே பெட்ரோல்-டீசல் விலையில் சில காசுகள் ரீதியிலேயே வித்தியாசம் காணப்படுகிறது. நாள்தோறும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டால், இனி அதிக அளவுக்கு பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இருக்காது. சில காசுகள் மட்டுமே ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். வாகன ஓட்டிகள் மத்தியிலும் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது.

No comments:

Post a Comment