இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, March 31, 2017

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்


எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி, ஏப்.12ம் தேதிக்குள் முடியுமென கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் (மார்ச் 30) முடிவடைந்தது. இதேபோல, பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.

பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை திருத்துவதற்கு, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும், தலா ஒரு திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று மொழி விடைத்தாள் திருத்தப்படும். 4ம் தேதி பிற பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை ஏப்.12ம் தேதிக்குள்ளும், பிளஸ் 2 விடைத்தாள்களை ஏப்.24ம் தேதிக்குள்ளும் திருத்தி முடிக்க, பள்ளி தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு


ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் பள்ளிகளின் விவரம்: சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (ஙங்ழ்ண்ற் கண்ள்ற்) தயார் செய்யப்படும். அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிதியாண்டு


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு காலக்கெடு நிறைவு , பட்ஜெட்டில் வருமான வரி விகிதம், வங்கி வைப்புத்தொகையில் மாற்றம் மற்றும் பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றத்துடன் புதிய நிதியாண்டு துவங்கியது.

அதன் விவரம் வருமாறு:

*கணக்கில் காட்டாத வருமானத்திற்கு இன்று முதல் வருமான வரி 77.2 சதவீதம் வரை வசூலிக்கப்படும்.

* ஆண்டு வருமானம் ரூ. 2..5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் இருந்தால் வருமான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

*இன்று முதல் வாகன காப்பீட்டு பிரீமியம் தொகை 41 சதவீதம் உயர்கிறது.

* பி.பி.எப். உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வகிதம் 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது.

* பெருநகர எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை ரூ.5000 வைத்திருக்க வேண்டும்.

* நகரவாழ் எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை, ரூ.3000 வைத்திருக்க வேண்டும்.

* சிறுநகர எஸ்.பி.ஐ., வாடிக்கை வாடிக்கையாளர்கள் ரூ.2000 வைத்திருக்க வேண்டும்.

* கிராமப்பகுதி எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் வைப்பத்தொகை ரூ.1000 வைத்திருக்க வேண்டும்.
மேற்கண்ட வைப்பு தொகை குறைவாக இருந்தால் வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.

* காற்று மாசை குறைக்க பி.எஸ்., 4 வகை வாகனங்கள் விற்கும் உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்படுள்ளது..

* தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 394 சுங்கச்சாவடிகளில் வாகன கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Thursday, March 30, 2017

ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை; பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை


சான்றிதழ் சரிபார்த்தல்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து கடந்த 2015–ம் வருடம் மே மாதம் 31–ந்தேதி எழுத்து தேர்வை நடத்தியது. 1900 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் அனைவரும் எடுத்த மதிப்பெண்கள் விவரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டது. அதை அரசு தேர்வுகள் இணைய தளத்தில் காணலாம்.

மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒருவர் நியமனத்திற்கு 5 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படுபவர்கள் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11–ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியதாவது:– கடும் நடவடிக்கை ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளிப்படையாக செய்யப்பட உள்ளது.

ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறி யாராவது பணம் கேட்டால் கொடுக்கவேண்டாம். அவ்வாறு மோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வக உதவியாளர் நியமனத்தில் முதன்மை கல்வி அதிகாரி அல்லது யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு இன்றுடன் முடிகிறது: 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம்


கடந்த 2ம் தேதி ெதாடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுடன் முடிகிறது. வரும் 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகின்றன. கடந்த 2ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 837 பேர் மாணவியர். 4 லட்சத்து 17 ஆயிரத்து 994 பேர் மாணவர்கள். ஒரே ஒரு நபர் திருநங்கை. மாணவர்களை விட கூடுதலாக 62 ஆயிரத்து 843 மாணவியர் இந்த ஆண்டு தேர்வு எழுதியுள்ளனர்.

அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலைப் பிரிவு பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354 பேரும் தேர்வு எழுதியுள்ளனர். மேற்கண்ட பள்ளி மாணவ, மாணவியரை தவிர தனித் தேர்வர்கள் 34 ஆயிரத்து 868 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களுக்காக, தமிழகம் முழுவதும் 2,434 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்றுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவடைகின்றன. இறுதி நாளான இன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. இதையடுத்து, வரும் 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 44 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளன.

இனி இ-சேவை மையங்களில் தான் குடும்ப அட்டை திருத்தப் பணிகள்


ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை இ-சேவை மையங்களில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வடிவிலான குடும்ப அட்டைகள் சனிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் வழங்கப்பட உள்ளன.

குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறுவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு, வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் குடிமைப் பொருள் வட்டாட்சியர் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகளை மேற்கொள்வதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். புதிய விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் சமர்ப்பித்து இணையதளம் மூலமாக இப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஏற்கெனவே சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய்த் துறையின் சான்றிதழ்கள் பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பம் அளிப்பதைப் போல, குடும்ப அட்டை தொடர் சேவைகளும் இ.சேவை மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான தனி மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறையினர் கூறியது: குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளம் மூலமாக பெறும் வசதி ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே இந்த சேவையைப் பெற முடியும். இதேபோல, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகள் அனைத்தும் இ-சேவை மையங்கள் மூலமாகவே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு கேபிள் தொலைக்காட்சி இ-சேவை மையம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் இ.சேவை மையங்களில் இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். விண்ணப்பங்களில் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அல்லது குடிமைப்பொருள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு இணைய வழியில் அனுப்பி வைக்கப்படும். ஆவணங்களின் அடிப்படையில் இணைய வழியிலேயே வழங்கல் துறையினர் ஒப்புதல் வழங்குவர். விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது தொடர்பான தகவல் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு, குடும்ப உறுப்பினர் சேர்க்கப்பட்ட, நீக்கப்பட்ட அல்லது திருத்தஹம் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட் கார்டை சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.

ஸ்மார்ட் கார்டு விநியோகம்: செல்லிடப்பேசிக்கு தகவல் வரும் ஸ்மார்ட் கார்டு விநியோகம் தொடர்பாக குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் சனிக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளன. அதுகுறித்த விவரம் குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். குறுஞ்செய்தியில் உள்ள கடவுச் சொல், பழைய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, குறுஞ்செய்தி பெறப்பட்ட செல்லிடப்பேசி ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்குச் சென்று ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதுவரை செல்லிடப்பேசி எண் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக தங்களது நியாய விலைக் கடையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு குறித்து குறுஞ்செய்தி வராதவர்கள் அச்சம் அடையத் தேவையில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார்.

வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது 'கிராஸ் மேஜர்'


அரசுப் பள்ளி முதுநிலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வில் மீண்டும் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னை தலைதுாக்கியுள்ளது.முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், மற்ற பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படும். பதவி உயர்வு மூலம் நிரப்புவதில், வரலாறு முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது.

இதையடுத்து, இளநிலையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்து, முதுநிலையில் வரலாறு, புவியியல், பாடப்பிரிவுகளை படித்தோரை (கிராஸ் மேஜர்) மூன்று பங்கும், இளநிலை, முதுநிலை இரண்டிலும் ஒரே பாடப்பிரிவை எடுத்து படித்தோரை (சேம் மேஜர்) ஒரு பங்கும் நியமிக்க 2000 அக்., 18ல் உத்தரவிடப்பட்டது.தற்போது, 'சேம் மேஜர்' முடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும், பழைய உத்தரவுப்படியே முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் நடக்கிறது; இதனால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கில் 1:3 என்ற விகிதப்படி பதவி உயர்வு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, 1:3 என்ற விகிதத்தை மாற்ற 2016 நவம்பரில் கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது; ஆனால், முடிவு அறிவிக்கவில்லை.தற்போது, முதுநிலை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் எந்த விகிதப்படி பதவி உயர்வு அளிப்பது என்ற தகவல் இல்லை; இதனால், வரலாற்று ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு வரலாறு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறியதாவது:நீதிமன்றம் உத்தரவிட்டும், 1:3 என்ற விகிதத்தை மாற்றவில்லை. தற்போது 'சேம் மேஜர்' ஆசிரியர்களுக்கு 2002--03 ஆண்டின் படியும், 'கிராஸ் மேஜருக்கு' 2007--08 ன் படியும் பணிமூப்பு பட்டியல் கோரப்பட்டுள்ளது. இதன்மூலம் 1:3 என்ற பழைய முறைப்படியே பதவி உயர்வு அளிக்க கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இவ்வாறு கூறினார்.

விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப்பாடு


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க தேர்வுத்துறை புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பத்தம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் முடிந்தது; இன்று பிளஸ் 2 தேர்வு முடிகிறது. இன்றே விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்குகிறது. கடந்த காலங்களில் பல குளறுபடிகள் அரங்கேறின.

விடைக்குறிப்பின்படி வழங்கப்பட்ட அதிகபட்ச மதிப்பெண்ணை விட, விடைத்தாளில் கூடுதல் மதிபெண் கொடுத்தது, சில பக்கங்களை திருத்தாமலும், மதிப்பெண்ணை அதற்குரிய 'காலத்தில்' எழுதாமலும் விட்டது என பல தவறுகள் தெரியவந்தன. இதை சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்று ஊடகங்களில் வெளியிட்டனர். இதனால் தேர்வுத் துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டது.தற்போது, 'முதன்மைத் தேர்வர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விழிப்புடன் கவனிக்க வேண்டும்' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஒரு முதன்மைத் தேர்வாளர் கட்டுப்பாட்டில், 10 உதவி தேர்வாளர்கள் மட்டுமே விடைத்தாள்களை திருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

தனித் தேர்வர்கள் கவனத்துக்கு: நாளை 8ஆம் வகுப்பு முடிவுகள்


ஜனவரி 2017ஆம் ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பவுள்ளன.

இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்கக மண்டலத் துணை இயக்குநர் தேவவரம் இனிய வேந்தன் கூறியது: 4.1.2017 முதல் 9.1.2017 வரை நடைபெற்ற 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேவர்களின் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தத் தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மதிப்பெண் விவரங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

*EMIS NEWS - தொடக்கக் கல்வி-EMIS இணைய தளத்தில் பள்ளி மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்தல் 31|03|2017 - க்குள் முடிக்கப்பட வேண்டும் - இயக்குனர் உத்தரவு!!*

Wednesday, March 29, 2017

மாத சம்பளக்காரர்கள் கணக்கு தாக்கல் செய்ய எளிய படிவம் அறிமுகம்


வருமான வரிக்கு உட்பட்ட சம்பளதாரர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர். தற்போது இந்த படிவத்தில் 18 பகுதிகள் உள்ளன. ஆனால், 2017-18 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய படிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கட்டாயம் நிரப்பப்பட வேண்டிய சில பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு, பெரும்பாலான பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இபைலிங் செய்பவர்களுக்கு இது மிக எளிமையாக இருக்கும். கணக்கு தாக்கல் படிவம் சிக்கலாக இருப்பதால், வரி வரம்புக்குள் உள்ள 29 கோடி பேரில் 6 கோடி பேர்தான் தாக்கல் செய்கின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க எளிமையான படிவம் கொண்டுவரப்படுவதாக வருமான வரி அதிகாரிகள் கூறினர்.

பெண்களுக்கு 26 வாரகால மகப்பேறு விடுப்பு: புதிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்


அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரகால மகப்பேறு விடுப்பு வழங்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தாய்மை அடையும்பட்சத்தில், அவர்களுக்கு 12 வாரகால மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த விடுப்பினை 26 வாரகாலமாக உயர்த்தும் வகையில் பழைய மகப்பேறு சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பாக வழங்க வேண்டும்; குழந்தை பேறு இல்லாத பெண்கள், மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையை தத்தெடுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு 12 வாரகால விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இந்தப் புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த 26 வாரகால மகப்பேறு விடுப்பானது, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கு மகப்பேறு விடுப்பாக 12 வாரங்கள் வழங்கப்படும்.
இது, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த சட்டத்திருத்த மசோதாவானது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்தச் சட்ட வரைவு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு ஸ்டேட் வங்கியில் விதிவிலக்கு: தமிழக அரசு தகவல்


பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்: மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது. எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம். குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும். பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.