இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, October 31, 2016

அரசு பள்ளிகளில் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு பாட வேளையிலும் வருகை பதிவு செய்ய வேண்டும் : பெற்றோர் வலியுறுத்தல்


அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வந்து விட்டு, இடைவேளையில் வகுப்பை, ‘கட்’ அடித்து விட்டு சென்று விடுகின்றனர். இவர்கள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொண்டால், அவர்கள் அந்த நேரத்தில் பள்ளியில் இருந்தது போன்றே ஆவணம் இருக்கும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருப்பதாகவே நினைப்பர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘பள்ளிகளில் ஒவ்வொரு பாடமும் துவங்கும்போது, மாணவர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர் யாராவது இடையில் இல்லாவிட்டால், உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து போனில் தகவல் சொல்ல வேண்டும். மறுநாள் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி விளக்கம் கேட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்’ என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், ‘இந்த திட்டம் ஊர் சுற்றும் மாணவர்களை திருத்துவதுடன், மாணவர்களுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படாமலும், பெற்றோரின் நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் இருக்கும். அதனால், அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு பாட வேளையிலும் வருகை பதிவு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
எனவே, அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், சினிமாவும், டிவியும் பள்ளி மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பாழடித்து வருகின்றன. பொழுது போக்கு சாதனங்களின் நிகழ்ச்சிகளில் மூழ்கும் சிறுவர்கள், எளிதில் காதல் வயப்பட்டு விடுகின்றனர். தங்களது எதிர்காலம் என்னாகும் என்பது குறித்த அச்சமின்றி, காதல் வயப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறி மாணவிகளுடன் சிலர் செல்கின்றனர். ‘’பிள்ளையை காணவில்லை’ என பெற்றோர் அளிக்கும் புகாரை அலட்சியப்படுத்த முடியாது என்பதால், அவர்களை தேடி கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கிறோம் என்றார்.

'பள்ளி வேன்களில் ஆசிரியை கூடாது'


பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்புக்கு, தனியாக பெண் காவலர்கள் அல்லது உதவியாளர்களையே பயன்படுத்த வேண்டும்.

மக்கள் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் போன்ற பணிகளைத் தவிர, பள்ளியின் மற்ற நிர்வாகப் பணிகளுக்கு ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது. இதை பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு எப்போது?


'ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, இரு மாதங்களுக்கு முன், இரண்டு சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தையும், அகவிலைப் படியையும் உயர்த்த வேண்டும். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக, தமிழக அரசு தாமதம் செய்வதாக தெரிகிறது. இந்நிலையில், அகவிலைப் படியை மட்டுமாவது உடனே உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம்


ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கல்வித் துறையில், 1978ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, அனைத்து பணியாளர்களும், அலுவலக ஆவணங்களில், தமிழில் மட்டுமே கையெழுத்திடவேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை, 1998ல் பிறப்பித்த அரசாணைப்படி, 'இன்ஷியல்' என்ற முன்னெழுத்தையும், தமிழில் மட்டுமே எழுத வேண்டும்; இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் உறைவிடப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள 66 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை கடந்த 2012, 2013 நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மெரிட் பட்டியலில் இடம்பெற்றவர்களைக் கொண்டு நிரப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த நியமனம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளின் (தகுதித்தேர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் நியமன முறை) இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வுசெய்யப் பட்டவர்களின் பட்டியல் பதிவெண், பெயர், பிறந்த தேதி, வெயிட்டேஜ் மதிப்பெண், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகிய விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in)வெளியிடப்பட்டு இருக்கிறது.

Sunday, October 30, 2016

செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவீத வட்டி மத்திய அரசு அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்கில், தொடர்ந்து 36 மாதங்களாக பணம் செலுத்தப்படாமல் இருந்தால், அந்த கணக்கு செயல்படாத கணக்கு ஆகி விடும். இப்படி செயல்படாமல் போன கணக்குகளில் ரூ.42 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் உள்ளது. 2011–2012–ம் நிதி ஆண்டில் இருந்து அத்தகைய கணக்குகளுக்கு வட்டி அளிப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இந்நிலையில், செயல்படாத பி.எப். கணக்குகளுக்கு 8.8. சதவீத வட்டி அளிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:–
தொழிலாளர் நலன் காக்கும் அரசு என்று கூறிக்கொண்ட முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு வட்டி அளிப்பதை நிறுத்தியது. ஆனால், நாங்கள் அந்த பணத்துக்கு வட்டி அளிக்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மற்றும் மத்திய நிதி மந்திரியுடன் ஆலோசனை நடத்திய பிறகு தொழிலாளர் நல அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப்போட்டி : தமிழக அரசு அறிக்கை


மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு (2016-17) சென்னை மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும் 4ம் தேதி சென்னை, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000ம், இரண்டாம் பரிசாக ரூ.7000ம், மூன்றாம் பரிசாக ரூ.5000ம், சான்றிதழும் வழங்கப்படும். போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்பெறும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்பெறும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று வரவேண்டும். போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவம் www.tamilvalarchithurai.org என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்வில் புதுமை இருக்காது


பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. 2017 மார்ச் பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழக பள்ளிக் கல்வி துறையின் அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதில், எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் உயர் கல்வி எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் போட்டி போட்டு, பொதுத் தேர்வை எதிர்கொள்ள, தங்கள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தருகின்றன. இந்நிலையில், 2017 மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு, வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. பல்வேறு வகை வினாத்தாள்கள் பாட வாரியாக பெறப்பட்டுள்ளன.

இதில், ஐந்து வகை வினாத்தாள் பட்டியல் தயாரிக்கப்படும். டிசம்பர் இறுதி யில், இந்த பட்டியலுக்கு அரசின் அனுமதி கிடைத்ததும், அச்சிடப்பட உள்ளது. இந்த வினாத்தாளில், எந்தவித மாற்றமும் இன்றி, முந்தைய ஆண்டுகளின் படியே வினாக்கள் இடம் பெறும் என, தெரிகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள், விரைவில் சுற்றறிக்கை வெளியிட உள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Cos calculation sheet


https://www.mediafire.com/download/14oxah6uecch0l5

Friday, October 28, 2016

'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு


'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரளா, புதுவை மாநிலங்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 முதல், பள்ளிகளில், ஆல் பாஸ் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். இந்த திட்டத்தால், கல்வித் தரம் குறைந்துள்ள தாக, மத்திய அரசின் ஆய்வு குழு தெரிவித்துள் ளது.எனவே,ஆல்பாஸ் திட்டத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர் பாக, பல மாநிலங்கள், தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன.
அவற்றில், தென் மாநிலங்கள் மட்டுமே, ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மாநிலங்கள் நிலை என்ன? :

*கர்நாடகா: பள்ளிக் கல்வியில், அனைத்து மாணவர்களும், எட்டு ஆண்டுகளாவது படிக்கும் படி, ஆல் பாஸ் திட்டம் தொடர வேண்டும்

* ஆந்திரா: ஆல் பாஸ் திட்டம் தொடர வேண்டும்; அதை மாற்றம் செய்தால், 'பெயில்' செய்யப்படும் மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிடுவர்

* தெலுங்கானா: மாணவர்கள்தேர்வு பயமின்றி பள்ளிக் கல்வியை முடிக்க, ஆல் பாஸ் திட்டம் தொடர வேண்டும்; அதில் மாற்றம் கூடாது

* மஹாராஷ்டிரா: மாணவர்கள், சமூகத்தில் சுய மரியாதையுடன் தலை நிமிர, ஆல் பாஸ் திட்டம் தொடர வேண்டும். மாநிலங்கள், தற்போது பின்பற்றும் முறையில் மாற்றம் கூடாது.இவ்வாறு இந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது.

தமிழகம்,கடைசி நேரத்தில் அறிக்கை சமர்ப் பித்ததால்,அதை மத்திய அரசு வெளியிட வில்லை.கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ஆல் பாஸ் திட்டம் தொடர, தமிழக அரசு விருப்பம் தெரிவித்ததாக கூறப் படுகிறது.தென் மாநிலங்களில் கேரளாவும், புதுச்சேரியும், ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு


தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல் பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்க, தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தேர்வுத்துறையின், http://www.tngdc.gov.in என்ற இணையதளத்தில், தலைமை ஆசிரியர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள், கடந்த ஆண்டு வினாத்தாள்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Thursday, October 27, 2016

வரும் 6ம் தேதி குரூப் 4 தேர்வு : 5451 பணியிடங்களுக்கு 15 லட்சம் பேர் போட்டி


தமிழக அரசு பணியில் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 5451 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு வருகிற 6ம் தேதி நடக்கிறது. இத்தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதுகின்றனர். ஒரு பதவிக்கு 275 பேர் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு பணியில் குரூப்-4 பதவிக்கு 5,451 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பதவிகளுக்கு கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்தனர். சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஒரு பதவிக்கு சராசரியாக 275 பேர் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதற்கு முன் ஒரு தேர்வுக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்ததில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

எழுத்து தேர்வு வருகிற 6ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். தேர்வில் பொது அறிவில் இருந்து 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்கள் என 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் என ெமாத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். வினாக்கள் அனைத்தும் ஆப்ெஜக்டிவ் வடிவில் இடம் பெற்றிருக்கும். தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இது தொட ர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: குரூப்4 தேர்வுக்கு சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

மேலும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பம் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் ஹால்டிக்கெட் கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் நகலுடன் contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 31ம் தேதிக்கு பிறகுப் பெறப்படும் கோரிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை டவுன்ேலாடு செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

ஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகார வழக்கு: தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்


ஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கில் தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் இடம்பெற்ற மனு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு சார்பில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டது. இதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், பிளஸ் டூ, பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என மற்றொரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

இதையடுத்து, ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பேர் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றில் வழக்குகளைத் தொடுத்தனர். இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தன. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் 423 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை இம்மாத தொடக்கத்திலும் கடந்த செவ்வாய்க்கிழமையும் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

அப்போது, நீதிபதிகள் தமிழக அரசு தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். இதன்படி, தமிழக அரசு தரப்பில் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வ வாதங்கள் அடங்கிய மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வில் எவ்வித குளறுபடியும் நடைபெறவில்லை. நடைமுறை விதிகள் எதுவும் மீறப்படவில்லை. எனவே, மனுதாரர்களின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'எமிஸ்' பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்


பள்ளி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கும், 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை திட்டத்தில், மாணவர் மற்றும் பள்ளி பெயர்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதியுதவியுடன், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மூலம், 'எமிஸ்' கல்வி மேலாண்மை தொழில்நுட்ப திட்டம், அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில், மாணவர்களின் பெயர், படிக்கும் பள்ளி, வகுப்பு, முகவரி, பெற்றோரின் மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவில், மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு, புதிய மாணவர்களின் விபரங்களை சேர்த்தல், பள்ளி மாறிய மாணவர் விபரங்களை மாற்றுதல் போன்ற பணிகளுக்கு, பள்ளிகளுக்கு இம்மாத இறுதி வரை கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், பெரும்பாலான தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த பணிகளை முடிக்கவில்லை. ஆசிரியர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி அளிக்கும், எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள், கணினியை இயக்கவும், மாணவர் விபரங்களை பதியவும் பயிற்சி அளிக்கவில்லை என, ஆசிரியர்கள் குமுறுகின்றனர். பயிற்சி அளிக்காமல், எமிஸ் திட்டத்தில் மாணவர் பெயர்களை பதிவு செய்ததால், பல மாவட்டங்களில், மாணவர்களின் பெயரும், அவர்கள் படிக்கும் பள்ளியும் மாறி, மாறி பதிவாகி உள்ளது. அதனால், ஆசிரியர்கள், தனியார் கணினி மையங்களை அணுகி உள்ளனர்.

கட்டண அடிப்படையில், அங்குள்ள ஊழியர்கள், கல்வித் துறையின் இணையதளத்தில், பெயர்களை பதிவு செய்கின்றனர். வரும் காலங்களிலாவது, இது போன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து


ஐந்தாம் வகுப்பு முதல், கட்டாயமாக ஆண்டு இறுதி தேர்வு நடத்தவும், 'ஆல் பாஸ்' திட்டத்தை நீக்கவும், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, தேர்வின்றி ஆல் பாஸ் செய்வது அமலில் உள்ளது.

இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்புகள் உள்ளன. மத்திய அரசு நடத்திய ஆய்விலும், இத்திட்டத்தால், பல மாணவர்கள், அடிப்படை கல்வியே தெரியாமல், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறுவது தெரிய வந்தது. எனவே, ஆல் பாஸ் திட்டத்தை, நான்காம் வகுப்போடு நிறுத்தி, ஐந்தாம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. டில்லியில், சமீபத்தில் நடந்த, மாநில கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், ஆல் பாஸ் திட்டத்திற்கு, சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், ஐந்தாம் வகுப்பில் தேர்வு வைக்கும் திட்டத்தை, மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என, மத்திய அரசின் கல்வி ஆலோசனைக் குழு, தெரிவித்து உள்ளது.

ஆல் பாஸ் திட்டம் ரத்தானால், ஐந்தாம் வகுப்பு, ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆறாம் வகுப்புக்கு மாணவர்கள் செல்ல முடியும். ஆறு, ஏழாம் வகுப்புகளில், பள்ளி அளவிலும், எட்டாம் வகுப்பிற்கு மாவட்டம் அல்லது மாநில அளவிலும் தேர்வு நடத்தப்படும். தேர்ச்சி பெறாவிட்டால், துணை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் அதே வகுப்பில், ஓராண்டு படிக்க வேண்டும்.