இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 26, 2016

தீபாவளிக்கு முன் சம்பளம் கிடைக்குமா ? என்ன சொல்கிறது அரசு அறிக்கை....!

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 29-ம்  தேதி கொண்டாடப்படுகிறது. 'மாத கடைசியில் தீபாவளி வருகின்றதே... செலவுக்குப் பணத்துக்கு என்ன செய்வது... ' என்ற வருத்தத்தில் அரசு ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அக்டோபர் மாத சம்பளத் தொகையை தீபாவளிக்கு முன்னரே வழங்கவேண்டும் என்று  கேட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த மாதம் தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அக்டோபர் 25-ம்  தேதி, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் க. சண்முகம் வெளியிட்ட அரசாணை 277-ல், 'இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 29-ம் தேதி அன்று வருவதால், தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அக்டோபர் 21-ம் தேதி கோரிக்கை விடுத்தது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்து 2016-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாதத்துக்கான ஊதியத்தை 28.10.16 அன்று வழங்க சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய தெளிவுரையை வழங்க முதன்மைச் செயலர் கருவூல கணக்கு ஆணையருக்கு அணுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது’ என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். "புதிய அகவிலைப்படியை 1.7.16 முதல் வழங்கவில்லை என்றாலும், இந்த மாத சம்பளத்தையாவது தீபாவளிக்கு முன்பு தர ஆணையிட்டுள்ளது சற்று ஆறுதலாக இருக்கிறது" என்று கூறி வந்தனர். ஊழியர்களின் சந்தோஷத்துக்கு வேட்டு வைப்பது போல,  நிதித்துறை  வெளியிட்ட அரசாணை  எண் 277-ஐ அமல்படுத்த வேண்டாம் என்று அவசர அவசரமாக கருவூலத்துறை ஆணையரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தனது, கிளை கருவூலங்களுக்கும், "அக்டோபர் மாத சம்பளத்தை வழக்கம் போல் இம்மாதமும் 31-ம் தேதி அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும்" என்று அறிவித்துள்ளனர். அரசுத் துறையிலேயே குழப்பமாக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது, அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கருவூல கணக்குத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது “மாதத்தின் இறுதி நாட்கள் விடுமுறை தினமாக இருந்தால் மட்டுமே அதற்கு முந்தின வேலைநாளன்று சம்பள விநியோகம் செய்யலாம். ஆனால் இந்த மாதம் 31-ம் தேதி அலுவல் நாளாக உள்ளது. கருவூல கணக்கு சட்டப்படி, இறுதி நாள் பணிநாளாக இருந்தால், அந்த நாளில் தான் சம்பளம் போட வேண்டும். தீபாவளி அன்று விடுமுறை, அதற்கு மறுதினம் ஞாயிற்றுக் கிழமை. ஆனால் திங்கள் கிழமை அன்று வேலைநாள். அன்று தான் மாதத்தின் கடைசி நாள். ஆனால் நிதித்துறை 28-ம் தேதி வெள்ளியன்று சம்பளம் போட அறிவித்தது. ஆனால் சட்டப்படி அந்தநாளில் அப்படி போட முடியாது என்பதால் தான், நாங்கள் எங்கள் அலுவலர்களுக்கு, 28-ம் தேதி சம்பளம் போட வேண்டாம். அரசாணை 277-ஐ அமல்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்” என்றனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி கூறுகையில் “மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள புதிய ஊதியமும் இதுவரை வழங்கவில்லை. அகவிலைப்படி உயர்வும் தரவில்லை. எங்களது கோரிக்கையை ஏற்று, இந்த மாத சம்பளத்தை அக்டோபர் 28-ம் தேதி போடுவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் அதற்கு கருவூலத்துறை முட்டுக்கட்டை போட்டுவிட்டது. அரசாங்கம் நினைத்தால் முன்கூட்டியே சம்பளம் போடலாம். ஆனால் அவர்கள் அதைபற்றி யோசிக்கவில்லை. நிதித்துறை அனுமதி அளித்தும், அவர்களுக்கு கீழ் செயல்படும் கருவூலத்துறை உயர் அதிகாரிகளின் பிடிவாதத்தால், 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குடும்பத்தின் தித்திக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்தை, கசக்க வைத்து விட்டனர். இதற்கு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கேட்டுகொண்டார். 

அரசுத் துறைகளின் இந்த மோதலால், தீபாவளிப்பண்டிகை அரசு ஊழியர்களுக்கு தீபா’வலி’   ஆகிவிடுமோ ?

- எஸ்.முத்துகிருஷ்ணன்.

No comments:

Post a Comment