இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 15, 2016

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் நேற்று பிற்பகல் சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சாந்தா ஷீலா நாயர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

தலைமை செயலக ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் தலா மூன்று நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும் தனித்தனியாக அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களை குழு தலைவர் சாந்தா ஷீலா நாயர் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் பற்றி தலைமை செயலக சங்க தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி, ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஓய்வூதியம் முக்கியமானது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் 1-4-2003 முதல் பழைய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 2004ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோன்று, மாநில அரசும் 10 சதவீதம் தனது பங்காக ஓய்வூதிய நிதிக்கு அளிக்கும். இந்த நிதி பங்கு சந்தையில் முதலீடு செய்து, அந்த முதலீடுகளில் கிடைக்கும் வருவாயில் பணியாளர்கள் ஓய்வுபெறும்போது, அவர்களுக்கு பங்குகளின் நிதி நிலைமைக்கேற்ப ஓய்வூதியம் வழங்குதுதான் புதிய ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டம் முற்றிலும் அரசு ஊழியர்களுக்கு எதிரானது ஆகும். மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமே இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் இது அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது. பிடிக்கும் பணம் பங்கு மார்க்கெட்டில் போடப்படுவதால் பணத்துக்கு பாதுகாப்பு கிடையாது. தேவையானபோது பணத்தை எடுக்க முடியாது. கடந்த 12 ஆண்டுகளில், பணியில் இருந்தபோது இறந்தவர்கள் ஒருவருக்கு கூட போட்ட பணம் திரும்ப கிடைக்கவில்லை. அதனால், புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பழைய ஓய்வூதியம் சாத்தியமில்லை வல்லுநர் குழுவினர் கைவிரிப்பு?

2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், இதனால் எந்த பலனும் இல்லை, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று 12 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதையடுத்து, தற்போது வல்லுநர் குழு அமைத்து, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் தமிழக அரசு நேற்று ஆலோசனை கேட்டது. 10க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தனித்தனியாக வல்லுநர் குழுவினரை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

வல்லுநர் குழுவினர் தெரிவித்த கருத்து குறித்து சில அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “நாங்கள் சொன்ன கருத்தை வல்லுநர் குழுவினர் கேட்டுக் கொண்டனர். அரசு தரப்பில் கூறும்போது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் தமிழக அரசுக்கு வரி உள்பட கிடைக்கும் அனைத்து வருவாயையும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மக்களுக்கு எந்த திட்டத்தையும் செய்ய முடியாது. அதனால் அதிகபட்சமாக தமிழக அரசால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் அரசு ஊழியர்களுக்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment