இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, April 28, 2016

குறள் விளக்கம்


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
இந்தக் குறளுக்குப் பொருள் கூறுங்கள், விளங்கினாற்போலும் விளங்காததுபோலும் இருக்கிறது என்று சிலர் கேட்கின்றனர்.
இந்தக் குறளுக்கான பொருளை எல்லாரும் ஓரளவு அறிவார்கள். உணவை உண்பவர்களுக்கு உணவை விளைவித்துத் தருவதும், உணவுண்போர்க்குத் தானே உணவாக ஆவதும் மழையே - என்பது அதன் பொருள்.
குறள்வழியே பொருளுணரும்படி சொல் சொல்லாகப் பிடித்து விளக்கினால்தான் உங்களுக்குக் குறளின் பெருமையும் பொருளின் அருமையும் புரியும். விளக்குகிறேன்.
இக்குறளில் பயிலும் துப்பு என்னும் சொல்லின் பொருள் ‘உணவு’.
துப்பு என்பதற்கு எண்ணற்ற பொருள்கள் காணப்படினும் இங்கு அதற்கு உணவு என்பதே பொருள்.
இப்போது குறளுக்குப் போவோம்.
துப்பு = உணவு
துப்பார்க்கு = உண்போர்க்கு.
பெயர்ச்சொல்லோடு அன், அள், ஆர் விகுதி சேர்த்தால் அப்பெயர்க்குரிய உயர்திணையைக் குறிப்பதாகிவிடும்.
எடுத்துக்காட்டாக, வம்பு என்பதோடு மேற்காணும் விகுதிகளைச் சேர்த்தால் வம்பன், வம்பினள், வம்பார் என வம்பு செய்வோரைக் குறிக்கிறோமே, அதுபோல.
ஆக, துப்பார்க்கு = உண்போர்க்கு
அடுத்து, துப்பாய’ என்றால் ‘உணவாகும்படியான’
தலையாய கடமை என்பதில் உள்ள தலையாய-விற்கு என்ன பொருள் கருதுகிறோம் ? ‘தலையாகும்படியான, தலையாகத்தக்க.’ அதுபோல துப்பாய என்றால் உணவாகும்படியான, உணவாகத்தக்க.
துப்பாக்கி = துப்பு + ஆக்கி = உணவாக்கி. இச்சொற்றொடர் உங்களுக்கு எளிமையாய் விளங்குகின்ற ஒன்று.
இதுவரை பார்த்தது குறளின் ஒரு பகுதி.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி = உண்போர்க்கு உணவாகும்படியான உணவை ஆக்கி. (1)
அடுத்த பாதிக்குச் செல்வோம்.
குறளின் நான்காம் சீர் என்ன ? மீண்டும் துப்பார்க்கு.
இங்கும் அதே பொருள்தான்.
துப்பார்க்கு = உண்போர்க்கு.
துப்பாயதூஉம் = இந்தச் சொற்றொடரில் உ என்ற அளபெடையை நீக்கிக்கொள்ள வேண்டும்.
செய்யுளில் இதுபோல் எங்கே அளபெடையைக் கண்டாலும் அவ்வெழுத்தை நீக்கிவிட்டு அதற்கு முன்னுள்ள எழுத்தைக் குறிலாய்க் கருத வேண்டும்.
துப்பாயதூஉம் என்பதில் உ என்னும் அளபெடையை நீக்கினால் கிடைப்பது துப்பாதூ__ம். அதற்கு முன்னுள்ள நெடிலைக் குறிலாக்கினால் துப்பாயதும்.
இவ்வாறு கிடைக்கும் இறுதிச் சொற்றொடரைத்தான் நாம் பொருள்கொள்ளக் கருதவேண்டும். நமக்குக் கிடைத்துள்ள இறுதிச் சொற்றொடர் ‘துப்பாயதும்’.
துப்பாயதும் = துப்பு ஆயதும் = ஆயது என்றால் ஆவது.
துப்பாயதும் = உணவு ஆவதும்.
குறளின் இரண்டாம் பகுதிக்கு முழுப்பொருள் காண்போம்.
துப்பார்க்குத் துப்பாயதூஉம் மழை = உண்போர்க்கு உணவாவதும் மழை. (2)
இப்போது (1) மற்றும் (2) ஆகிய இவ்விரண்டு பொருள் முடிவுகளையும் ஒன்றாக்கிப் பாருங்கள்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி = உண்போர்க்கு உணவாகும்படியான உணவை ஆக்கி.
துப்பார்க்குத் துப்பாயதூஉம் மழை = உண்போர்க்கு உணவாவதும் மழை.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
உண்போர்க்கு உணவாகும்படியான உணவையும் ஆக்கி, உண்போர்க்குத் தானே உணவும் ஆகும் மழை.
தெளிவாக விளங்கிக்கொண்டீர்களா ?

No comments:

Post a Comment