இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, July 03, 2015

தனியார் பள்ளி அரசு ஒதுக்கீட்டில் 51685 காலி இடங்கள்

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 51 ஆயிரத்து 685 இடங்கள் காலியாக உள்ளன. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர் அல்லாத தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் ஏழை, நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ், ஜூன் 30-ஆம் தேதியன்று காலியாக உள்ள இடங்களின் விவரங்களை மெட்ரிக். பள்ளிகள் இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்டது.

அதன் அடிப்படையில், எல்.கே.ஜி. உள்ளிட்ட அறிமுக வகுப்புகளில் சுமார் 4 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 1 லட்சத்து 17 ஆயிரத்து 480 இடங்கள் உள்ளன. இவற்றில் 65,795 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் எல்.கே.ஜி. வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 51 ஆயிரத்து 685 இடங்கள் காலியாக உள்ளன. மெட்ரிக் பள்ளிகளைப் பொருத்த வரை, 3,673 பள்ளிகளில் எல்.கே.ஜி. உள்ளிட்ட அறிமுக வகுப்புகளில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 385 இடங்கள் உள்ளன. இவற்றில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 61,875 இடங்கள் உள்ளன. இதில் 39,329 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 22,546 இடங்கள் காலியாக உள்ளன.

மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளைப் பொருத்த வரை, 5,314 பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு 55,605 இடங்கள் உள்ளன. இவற்றில் 26,466 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 29,139 இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில் 60 பள்ளிகளில் சேர்க்கை இல்லை: சென்னை மாவட்டத்தைப் பொருத்த வரை, மொத்தமுள்ள 304 மெட்ரிக் பள்ளிகளில் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படவில்லை. இந்தப் பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

அந்த விவரங்கள் கிடைக்காததால் இத்துடன் சேர்த்து வெளியிடப்படவில்லை. விவரங்கள் கிடைத்ததும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். விண்ணப்பங்களை எங்கே பெறலாம்? இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடமிருந்தோ, www.tnmatricschools.com என்ற இணைதளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடமோ அல்லது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அலுவலகத்திலோ விண்ணப்பத்தை அளித்து சேர்க்கை பெறலாம். இந்த ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் நவம்பர் 30-ஆம் தேதி வரை மாணவர்களைச் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment