இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, September 22, 2014

தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


    இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2010-ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களாகப் பணி நியமனம் கோருவோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்களுக்காக முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்காக இரண்டாம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத் தகுதிகாண் மதிப்பெண் முறையில் அடிப்படையில் பணி நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. அதாவது, இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு பிளஸ் 2 (15), ஆசிரியர் பட்டயப் படிப்பு (25), ஆசிரியர் தகுதித் தேர்வு (60) ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 (10), பட்டப் படிப்பு (15), பி.எட். (15), ஆசிரியர் தகுதித் தேர்வு (60) மதிப்பெண்களுக்கு தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்பட்டது. மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, இந்த தகுதிகாண் மதிப்பீடுகளைக் கணக்கிடும்போது -ஸ்லாப்- முறை பின்பற்றப்பட்டது இதை மாற்றி ஒவ்வொரு மதிப்பெண் சதவீதத்துக்கும் தகுதிகாண் மதிப்பெண் முறையை கணக்கிடும் வகையில் இந்த முறையை மாற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.  அதைப் பின்பற்றி கடந்த மே மாதம், தமிழக அரசு புதிய அரசாணையும் வெளியிட்டது. இந்தப் புதிய தகுதிகாண் மதிப்பெண் முறையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேர், இடைநிலை ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தகுதிகாண் மதிப்பெண் முறை தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவு, தமிழக அரசின் அரசாணை ஆகியவற்றை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த தகுதிகாண் மதிப்பெண் முறை காரணமாக தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரினர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: தகுதிகாண் மதிப்பெண் முறை தொடர்பாக தனி நீதிபதி பரிந்துரை செய்த முறையில் எந்தக் குறைபாட்டையும் இந்த நீதிமன்றம் கண்டறியவில்லை. மேலும், வேறு முறையையும் தமிழக அரசு பின்பற்றலாம் என தனி நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். தன்னிச்சையாகவும், நியாயமில்லாமலும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்பதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

மேலும், வழக்கு விசாரணையின்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதை எதிர்த்தும் வாதிடப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதிமுறைப்படியே, தமிழக அரசு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு. இந்த உத்தரவு தன்னிச்சையாகவோ, உரிய காரணங்கள் இன்றியோ பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். இந்த வழக்குகளின் ஆவணங்களைப் பார்த்த பிறகு, அரசின் முடிவில் தலையிடுவதற்கான எந்தக் காரணங்களும் நீதிமன்றத்துக்கு இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment