இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, August 17, 2014

ஓரிரு வாரங்களில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரம் பேர் அடங்கிய தேர்வுப் பட்டியல், ஆங்கிலம், வேதியியல் உள்ளிட்டப் பாடங்களில் 1,200 பேர் அடங்கிய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரின் முழுவிவரங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கான பணி மூப்பு போன்றவற்றுடன் கூடிய தேர்வுப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்க வேண்டும்.

ஒரு வாரத்துக்குள் இந்த விவரங்களுடன் கூடிய தேர்வுப் பட்டியல் வழங்கப்பட்டுவிடும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பிறகு, இந்தப் பட்டியலின் அடிப்படையில் பணி நியமனத்துக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும். பெரும்பாலும் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களுக்கான பணி நியமன ஆணைகள், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன. இந்த விழாவுக்கான தேதி ஒரு சில நாள்களில் இறுதிசெய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல், மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவை இந்த விழாவுக்கு முன்னதாகவே வெளியிடப்பட உள்ளன. பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண சலுகைக்குப் பிறகு இந்தத் தேர்வில் மொத்தம் 72 ஆயிரம் பேர் தேர்ச்சியடைந்தனர்.  இதில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மூலம் சுமார் 11 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்கெனவே தமிழ், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆங்கிலம், கணிதம்,  வேதியியல், தாவரவியல், வரலாறு, நுண் உயிரியல் ஆகிய பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடைகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களின் திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment