இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, 31 May 2016

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்குஜூன் 3, 4ல் விண்ணப்பிக்கலாம்


பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு, ஜூன் 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று காலை, 10:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, விடைத்தாள் நகலை பெறலாம். விடைத்தாள் நகலை பெற்ற பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, ஜூன், 3, 4ம் தேதிகளில், மாலை 5:00 மணிக்குள், முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை, முதன்மை கல்வி அலுவலகத்திலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

Monday, 30 May 2016

10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு : ஜூன் 1 முதல் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வுக்கு ஜூன் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் அவர்கள் படித்த பள்ளிகள் மற்றும் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஜூன் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175 ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகளிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். ஹால்டிக்கெட்டுகளை தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதி சீட்டில் அறிந்து கொள்ளலாம்

ரேஷனில் பொருட்கள் வாங்க ஆதார் கார்டு கட்டாயமாகிறது : ஜூன் 1ம் தேதி முதல் அமல்


தமிழகத்தில் ரேஷன் கடையில் ஆதார் அட்டை இருந்தால்தான் பொருட்கள் வழங்கப்படும். இதற்கான உத்தரவு ஜூன் 1ம் தேதி முதல் அமலாகிறது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய், சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சிவில் சப்ளை துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், ‘ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர் தவறாது ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஏராளமானோர் ஆதார் அட்டை இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கான மாற்று வழி எதுவும் கூறப்படவில்லை.

அரசின் புதிய உத்தரவால் ஆதார் அட்டை இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பயனாளிகள் கூறுகையில், ‘‘ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க, ஆதார் அட்டை கொண்டு செல்வது அனைவருக்கும் சாத்தியப்படுமா என தெரியவில்லை. ஆதார் அட்டை இல்லாதவர்களின் நிலைமை குறித்து சிவில் சப்ளை துறை தெளிவாக விளக்க வேண்டும்’ என்றனர்.

Sunday, 29 May 2016

தேசிய விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு


அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மத்திய கல்வியியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் நடப்புக் கல்வியாண்டில் கணினி வழிக் கற்றல் திட்டத்தின் கீழ் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்படும் தகுதியுடைய கணினி ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும்.

எனவே மாவட்ட வாரியாக மூன்று ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அந்த ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை ஏற்கனவே வழங்கப்பட்ட படிவங்களுடன் இணை இயக்குநர்(தொழிற்கல்வி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தத் திட்டம் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்த விவரங்களை www.ciet.nic.in, www.ncert.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம்.

மாவட்ட தேர்வுக் குழு தலைவர், ஆசிரியர் சார்பான கருத்துகளைப் பரிந்துரைக்கும்போது எந்தவித புகாருக்கும், குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்படாதவர், நீதிமன்ற வழக்குகளுக்கு உட்படாதவர் என சான்றளிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் 'டி.இ.டி.,' எனும் தீராத குளறுபடி! எதிர்பார்ப்பில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்


தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவுறுத்தலால், தமிழகத்தில் 15.11.2011ல், தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் என (அரசாணை எண்: 181) உத்தரவிடப்பட்டது. இதன்படி 2012, 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013ல் நடந்த தேர்வில் அதிக எண்ணிக்கையிலான தேர்ச்சியால் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதேபோல், '90 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்பதில் இருந்து, அரசு சார்பில் 5 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டு 85 சதவீதம் அதாவது, 90 மதிப்பெண்ணில் இருந்து 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி,' என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர். ஆனால், இதுதொடர்பாகவும் வழக்குகள் தொடரப்பட்டதால் அந்த வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன.

இவ்வழக்குகளை முடித்து, தேர்ச்சி பெற்றவர்கள் பயன்பெற, கடந்த மூன்று ஆண்டுகளாக கல்வித்துறை அதிகாரிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை.மேலும், 23.8.2010க்கு பின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வரும் நவ.,க்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். டி.இ.டி., தேர்வு அறிவிக்கப்படாதபட்சத்தில் இவர்களின் பணி நியமனத்திலும் புதிய குளறுபடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:

டி.இ.டி., தேர்வில் அரசு அறிவித்த சலுகை என்பது கொள்கை முடிவு. குறிப்பாக, 5 சதவீதம் சலுகை மதிப்பெண் விஷயத்தில் அரசு ஆர்வம் காட்டாததால் நீதிமன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. என்.சி.டி.இ.,யின் முரண்பாடான பாடத் திட்டம், தமிழக அரசின் 'வெயிட்டேஜ்' முறையும் குழப்பத்திற்கு முக்கிய காரணம். இதை ரத்து செய்ய வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திலும் கடைபிடித்தால் தீர்வு கிடைக்கும். சிக்கலில் பள்ளிகள்: அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் டி.இ.டி., தேர்வு கட்டாயமில்லை என நீதிமன்றம் வலியுறுத்தியும், அதுதொடர்பாக தமிழக அரசு எவ்வித அரசாணையும் பிறப்பிக்காததால் இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமனங்களும் குழப்பத்தில் உள்ளன, என்றார்.கல்வித் துறையில் நிலவும் இப்பிரச்னைகளுக்கு அமைச்சர் பெஞ்சமின் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை


'ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லாதது கவலைக்குரியது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

புதிய கல்வி ஆண்டில், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார். அதன் முக்கிய அம்சங்கங்கள்:

பள்ளி திறக்கும் முன்பே வளாகத்தை சுத்தம் செய்து, பராமரித்திருக்க வேண்டும் கடந்த ஆண்டை விட, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

குறைவாக மாணவர் உள்ள பகுதிகளில், வீடு வீடாகச் சென்று, கல்வி கற்க வராத மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் ஒவ்வொரு நாளும் என்ன பாடம் எடுக்க வேண்டும் என்பது குறித்த, பாடத்திட்டத்தை வாரத்தின் முதல் நாளே ஆசிரியர்கள் தயார் செய்து, தலைமை ஆசிரியர் பார்வைக்கு அனுப்ப வேண்டும்

நீதி போதனை வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் மற்றும் எழுத்து பயிற்சியை அதிகரிக்க வேண்டும் ஆசிரியர்களும், தங்கள் வாசித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; பல ஆசிரியர்கள், வாசிப்பில் ஆர்வம் காட்டாதது கவலைக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, 28 May 2016

மாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு


பள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் தலைமையில், துறை ரீதியான முதல் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது.

இதில், துறைச் செயலர் சபீதா, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி குறித்து, அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கினர். நடப்பாண்டில், பள்ளி மாணவர்களுக்கான இலவசத் திட்டங்களுக்கு, 3300 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே, இலவச பாடப் புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டணம் உயரும்


அடுத்த மாதம் முதல், சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால், ஓட்டல், பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும், கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த, 2015ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சேவை வரியை, 12.36 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார். அது, கடந்த ஆண்டு ஜூன், 1 முதல் அமலுக்கு வந்தது. அதன்பின், நவம்பர், 1 முதல், 'துாய்மை பாரதம்' திட்டத்துக்காக, 0.5 சதவீதம் கூடுதலாக சேவை வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 'கிரிஷி கல்யாண்' எனப்படும், வேளாண் மேம்பாட்டு திட்டங்களுக்கு செலவிடுவதற்காக, சேவை வரி, மேலும், 0.5 சதவீதம் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஜூன், 1 முதல் சேவை வரி விகிதம் மீண்டும் உயர்கிறது. அது இனி, 15 சதவீதமாக இருக்கும். சேவை வரி உயர்வதால், கோடிக்கணக்கான மொபைல் போன் வாடிக்கையாளர்கள், இனி கூடுதல் கட்டணத்தை செலவிட வேண்டும். அதேபோல, குளிர்சாதன வசதி உடைய உணவகங்களில் சாப்பிடுவோரும், 'பார்'களுக்கு செல்வோரும் கூடுதலாக செலவிட வேண்டும். மேலும், ஓட்டல்களில் தங்கும் கட்டணம், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கும் போது பத்திரப்பதிவு கட்டணம், விமான கட்டணம், கிரெடிட் கார்டு சேவை கட்டணம் உள்ளிட்டவையும் அதிகரிக்கின்றன.

சேவை வரி ஏன்? பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ள சில தனியார் துறைகளிடம், அவர்கள் அளிக்கும் சேவைக்காக மத்திய அரசு, சேவை வரி வசூலிக்கிறது. ஆனால், இதை நுகர்வோர் தலையில் தான் அந்த நிறுவனங்கள் கட்டுகின்றன. சேவை வரி, 1999ம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் கீழ், மறைமுக வரி விதியாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில், சேவை வரி, 2.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Thursday, 26 May 2016

பள்ளி திறக்கும் நாளில் விலையில்லா நலத் திட்டங்கள்: உறுதி செய்ய இயக்குநர் உத்தரவு


பள்ளிகள் தொடங்கும் நாளன்றே மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது அவர்களை வரவேற்று, அவர்களுக்க நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கித் தர வேண்டும். பள்ளிகள் தொடங்கும் நாளன்றே மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். சுத்தமான குடிநீர், தண்ணீர், கழிப்பறை வசதிகளையும் உறுதி செய்யப்பட வேண்டும்.

திறந்தவெளிக் கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பிகள், பழுதடைந்த கம்பிகள், புல், புதர்கள் இல்லாமல் இருப்பதையும், வளாகத் தூய்மையையும் உறுதி செய்ய வேண்டும். ஆங்கில வழிப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்தவும், பள்ளி வயது குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களை வலியுறுத்த கூட்டம் நடத்த வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலுக்குதயாராகும் வாக்காளர் பட்டியல்


சட்டசபைத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதற் கட்டமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை துவங்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தர Wவிடப்பட்டுள்ளது.

இதற்காக அந்தந்த மாவட்டங்களில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாவட்ட தேர்தல் பிரிவிடம் இருந்து வாக்காளர் பட்டியலை பெற்றுள்ளனர். தொகுதி வாரியாக உள்ள வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் வார்டு வாரியாக பிரித்து புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க உள்ளனர். இந்த பட்டியல் அடிப்படையிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த அந்தந்த மாவட்டங்களில் தனியாக பி.டி.ஓ.,க்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்

பள்ளிகளில் ரவா கேசரி உப்புமா சாத்தியமா?

தமிழகத்தில் தற்போது சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு டிபன் வழங்கப்படும் என்று அறிவித்து முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற முதல் நாளிலேயே அந்த திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

ஏற்கனவே அரசு தொடக்கப்பள்ளிகள் முதல் உயர்நிலைப்பள்ளிகள் வரை,அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சத்துணவு பணியாளர்கள் சம்பளம் போதாது என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் காலை டிபன் என்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் மத்திய உணவாக ஒரு நாள் புளியோதரை, மறுநாள் வெஜ்டபிள் பிரியாணி, அடுத்த நாள் சாம்பார் சாதம், கறிவேப்பிலை சாதம், லெமன் சாதம் என்று 13  வகையான சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் தினமும் ஒவ்வொரு மாணவனுக்கு முட்டையும், முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழமும் வழங்கப்படுகிறது. சத்துணவு திட்டத்தில் மதிய உணவுக்காக ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.6.88 பைசா என்று நிர்ணயம் செய்து  உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்த மதிய உணவு திட்டத்தில் 55 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். சத்துணவு திட்டத்தில் மதிய உணவு தயாரிப்பில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர்கள் என்று 78 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். சத்துணவு பணியாளர்கள் சம்பளம், உணவுப்பொருள்கள் என்று ஒவ்வொரு ஆண்டும் அரசு  ரூ,747 கோடியே 28 லட்சம் செலவிடப்படுகிறது.

தற்போது அரசு பள்ளிகளில் காலை டிபன் என்ற அறிவிப்பு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பபை பெற்றுள்ளது. ஆனால், சத்துணவு பணியாளர்கள் தரப்பிலோ கூடுதல் பணிச்சுமை, சம்பளம் பற்றாக்குறை என்று புலம்புகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசினோம். ''தமிழகத்தில் ஆரம்பத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் பணியாற்றினோம். ஆனால், பணி நிரந்தரம் இல்லாதது, சம்பளம் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் பல ஆயிரம் பேர் வேறு பணிகளுக்கு சென்று விட்டனர். தற்போது 40 ஆயிரம் காலியிடங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட இப்போது 80 ஆயிரம் பேர்தான் பணியாற்றுகின்றனர். சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பகுதிகளில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமும், சமையலருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும், உதவியாளருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

மதிய உணவு தயாரிப்பதற்காக காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்று மதியம் இரண்டரை மணிக்கு பணியை முடித்து விடுவோம். இப்போது காலை டிபன் திட்டத்திற்காக காலை 6 மணிக்கு சென்றால்தான் 8 மணிக்குள் டிபன் தயாரித்து மாணவர்களுக்கு வழங்க முடியும்,. பிறகு மதிய உணவு தயாரிக்க வேண்டும். இதனால் பணி நேரம் அதிகரித்து கூடுதல் பணிச்சுமையால் சிமரப்படுவோம். எங்களுக்கு சம்பளமும் போதவில்லை. பணி நிரந்தரம் செய்வதும் இல்லை. இதை விட முக்கியமான பிரச்னை விலைவாசி உயர்வு காரணமாக மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் தரமான உணவை கொடுக்க முடிவதில்லை. எனவே, அரசு மாணவர்களுக்கு நிர்ணயித்த விலையை உயர்த்தி வழங்க வேண்டும். காலை டிபனால் பணிச்சுமை கூடுவதால் சம்பளத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இதுதொடர்பாக சத்துணவு திட்டத்தின் இணை இயக்குனர் இளங்கோவனை தொடர்பு கொண்டோம். ''முதல்வர் அறிவித்தபடி முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 26 ஆயிரத்து 709 அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தொடக்கப்பள்ளியில் படிக்கும் 266 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஒரு மாணவனுக்கு காலை டிபனுக்காக ரூ.3 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர்கள் காலை 6 மணிக்கு பள்ளிக்கு வந்து 8 மணிக்கு மாணவர்களுக்கு டிபன் வழங்குவார்கள். ஒவ்வொரு மாணவனுக்கும் 100 கிராம் எடையளவு கொண்ட டிபன் வழங்கப்படும்.

வாரத்தில் 5 நாட்களுக்கு முதல் நாள் கோதுமை உப்புமா, கேழ்வரகு புட்டு, ரவா கேசரி, சேமியா கேசரி, சவ்வரிசி கஞ்சி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை டிபன் வழங்கப்படும். இதன் மூலம் மளிகை சாமான்கள், போக்குவரத்து செலவு என்று ஒரு ஆண்டுக்கு ரூ.354 கோடி ரூபாய் 86 லட்சம் ரூபாய் செலவாகும். பிறகு அடுத்தகட்டமாக மற்ற பள்ளிகளுக்கும் இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும்.

காலை டிபன் தொடர்பாக சத்துணவு துறை மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அந்த நாள் முதல் பள்ளிகளில் காலை டிபன் வழங்கப்படுமா இல்லை தள்ளிப்போகுமா என்று தெரியவில்லை. அரசிடம் இருந்து இந்த திட்டம் தொடர்பாக முறையான அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. விரைவில் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கோம்'' என்றார்.

இருதரப்பிலும் பேசியதிலிருந்து முதல்வர் அறிவித்த காலை உணவு திட்டம் சாத்தியம்தான் என்று தோன்றினாலும், ஆள் பற்றாக்குறையால் காலை டிபன் தயாரிக்கும் பணி தாமதமாகலாம் எனவும், விலை ஏற்றத்தால், தரமான பொருட்களை உபயோகித்து இதன் மூலம் சுவையான உணவு கொடுக்கப்படாமல் போகலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஒரு துறை வெற்றிகரமாக இயங்கவேண்டுமானால், அந்த உள்ள அனைத்து குறைகளையும் அரசு முதலில் களைய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

-எம்.கார்த்தி